மும்பை : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் துருவ் ஜுரேல் என்ற இளம் வீரர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மாற்று விக்கெட் கீப்பராக அவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர் குறித்த சில சுவாரசிய தகவல்கள் கிடைத்தன. மேலும், அவருக்கு இந்த டெஸ்ட் தொடரில் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது குறித்தும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தர பிரதேச மாநில கிரிக்கெட் வீரரான துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். அதே மாநிலத்தை சேர்ந்த ரிங்கு சிங்கின் உயிர் நண்பர் இவர். கடந்த ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் கடைசி ஐந்து பந்துகளில் 5 சிக்ஸ் அடித்த நிலையில் அவருக்கு அப்போது போட்டி முடிந்த உடன் முதன் முதலில் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறியது துருவ் ஜுரேல் தான். அந்த அளவுக்கு இருவரும் நெருக்கம்.

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய துருவ் ஜுரேல் இம்பாக்ட் பிளேயராக சில போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி கவனம் ஈர்த்தார். அதன் பின் பெரிய சத்தம் இன்றி இருந்த நிலையில் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
அண்டர் 19 அணியில் இருந்தே துருவ் ஜுரேல் மீது பிசிசிஐ தேர்வுக் குழு ஒரு கண் வைத்து இருந்தது. பின்னர் ஐபிஎல் செயல்பாடுகளால் ஈர்த்தவர், தொடர்ந்து ரஞ்சி ட்ராபி, விஜய் ஹசாரே ட்ராபி போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்ததை அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் மாற்று விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
ஏற்கனவே, மாற்று விக்கெட் கீப்பராக டெஸ்ட் அணியில் இடம் பெற்று வந்த இஷான் கிஷன் தாமாக சிறிது காலம் போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் நிலையில், அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் கே எல் ராகுலுக்கு மாற்று விக்கெட் கீப்பராக கே எஸ் பாரத் உடன், துருவ் ஜுரேலும் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒருவேளை கே எல் ராகுல் காயமடைந்தால் கூட பாரத்துக்கு தான் அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கும். துருவ் ஜுரேலுக்கு இந்திய அணியில் இது ஒரு துவக்கமாக இருக்கும் என தெரிகிறது. மூத்த வீரர்களுடன் பேசி, தன்னை வளர்த்துக் கொள்ள அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவே கருதப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி -
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான்