இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி எப்போது துவங்கும்? நேரம், இடம், ஒளிபரப்பு விவரம்
லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை தொடங்க உள்ளது. இதுவரை இந்தத் தொடரில் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதன் முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. அடுத்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால், மூன்றாவது போட்டி மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
ஏனெனில், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி 2-1 என முன்னிலை பெறும். இதன் மூலம் கடைசி இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை வென்றால் போதும் என்ற வாய்ப்பு கிடைக்கும். எனவே, புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் போட்டி நாளை, ஜூலை 10 அன்று, துவங்கி 14ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறும். இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு இந்தப் போட்டி துவங்கும். முதல் நாளன்று டாஸ் போடும் நிகழ்வு மதியம் 3 மணிக்கு நடைபெறும்.
எங்கு பார்க்கலாம்?
இந்தப் போட்டியைப் பார்க்க விரும்புபவர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் குழும தொலைக்காட்சிகளில் கண்டுகளிக்கலாம். இந்தப் போட்டியை மொபைல் அல்லது இணையதளத்தில் பார்க்க விரும்புபவர்கள் ஜியோசினிமா (JioCinema) இணையதளம் மற்றும் செயலியிலும் பார்க்கலாம்.
லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் வரலாறு:
இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 19 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 12 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. 5 போட்டிகளில் டிரா செய்துள்ளது. இந்திய அணியின் வெற்றி சதவீதம் லார்ட்ஸ் மைதானத்தில் வெறும் 10.5% மட்டுமே.
கடந்த காலங்களில் லார்ட்ஸில் இந்தியா:
கடைசி மூன்று முறை இந்திய அணி இங்கு ஆடியபோது, அதில் இரண்டு வெற்றிகளையும் ஒரு மோசமான தோல்வியையும் சந்தித்துள்ளது.
- 2014 ஆம் ஆண்டு: தோனி தலைமையிலான இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் 95 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி கேப்டன்ஷியில் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி வென்ற ஒரே போட்டி இதுதான்.
- 2018 ஆம் ஆண்டு: விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
- 2021 ஆம் ஆண்டு: இந்திய அணி இந்த மைதானத்தில் 151 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த மூன்று முறைகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்றிருப்பதால், இந்த முறையும் இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த முக்கியமான போட்டியில் எந்த அணி ஆதிக்கம் செலுத்தும் என காத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications