ஹைதராபாத் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திறமையை வெளிக்காட்டி வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் பதற்றம் அடைந்த இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து 246 ரன்களும், இந்தியா 436 ரன்களும் சேர்த்தன. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து 420 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இந்தியா 202 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய டாம் ஹார்ட்லி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணம் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தான் எனக் கூறினார் 7 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமான டாம் ஹார்ட்லி. அவருக்கு இதுதான் முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய நிலையில் அவர் முதல் இன்னிங்ஸில் 25 ஓவர்களில் 131 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருந்தார். அதற்கு காரணம், பிட்ச்சில் சுழற் பந்துவீச்சுக்கு அதிக ஒத்துழைப்பு இல்லை என்பதுதான். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் மேஜிக் செய்த அவர் 7 விக்கெட்களை அள்ளி இந்திய அணியை தனி ஆளாக வீழ்த்தினார்.
போட்டிக்கு பின் பேசிய டாம் ஹார்ட்லி, இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசும் முன் ஜடேஜா, அஸ்வின் பந்துவீச்சை தான் பார்த்ததாகவும், அவர்கள் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத பிட்ச்சில் வேகமாக பந்து வீசாமல், வேகத்தை குறைத்து வீசியதை பார்த்து தானும் அதே மாதிரி செய்ததாகவும், அதே போல, இரண்டாம் இன்னிங்ஸில் அஸ்வின், ஜடேஜாவைப் பார்த்து லைன் மற்றும் பந்து வீசும் பாதையை மாற்றினோம் கூறினார். அந்த வகையில் அஸ்வின், ஜடேஜா தங்களுக்கே தெரியாமல் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளனர்.
மேலும், முதல் இன்னிங்ஸில் ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு இல்லாததால் தான் சோர்ந்து இருந்த போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்ட இடத்தில் பிட்ச் ஆகுமாறு மட்டும் பந்து வீசுங்கள், பந்து ஸ்பின் ஆகவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை எனக் கூறினார் என்றார் டாம் ஹார்ட்லி.