IND vs ENG:வருண் சக்கரவர்த்தி நடத்திய விக்கெட் வேட்டை.. இங்கிலாந்து கதையை முடித்த இந்திய பவுலிங் படை
ராஜ்கோட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் கதையை முடித்தார். 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும் என்பதால் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. ராஜ்கோட்டில் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் சில ஓவர்களில் அமைதி காத்தாலும் பின்னர் அதிரடி காட்டி ரன்களை சேர்த்தனர். இந்த சூழலில் வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் கேப்டன் ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆனது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பென் டக்கட் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து அபாயகரமான வீரராக திகழ்ந்தார். ஆனால் அவர் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹரி புருக் 8 ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணி தடுமாறியது. இந்த நிலையில் ஆட்டத்தின் 14 வது ஓவரை வீசிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஹாட்ரிக் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போனது. அதன் பிறகு களம் இறங்கிய மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. நடுவரிசையில் களம் இறங்கிய லிவிங்ஸ்டோன் 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications