மும்பை : இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி விலகிய நிலையில், கடைசி மூன்று போட்டிகளிலாவது அவர் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் இது வரை அது குறித்து பிசிசிஐக்கு எந்த தகவலும் கூறவில்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி மட்டுமே முதலில் அறிவிக்கப்பட்டது. அதில் இருந்து தான் விராட் கோலி விலகி இருந்தார். தற்போது கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.

எப்படியும் விராட் கோலி கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விராட் கோலி இதுவரை பிசிசிஐ-யை தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. முன்னதாக அவர் தன் குடும்பத்தில் எதிர்பாராத அவசரநிலை ஏற்பட்டதால் அணியில் இருந்து விலகி இருந்தார். அவர் மீண்டும் கிரிக்கெட் ஆடும் மனநிலைக்கு வரவில்லை என்பதால் அவர் இன்னும் பிசிசிஐ-யை தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
எனினும், செவ்வாய்க்கிழமை அன்று கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. அதில் கோலி பதில் கூறாவிட்டாலும் கூட அவர் பெயர் சேர்க்கப்படும் என தெரிகிறது. அதன் பின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக கோலி இந்திய அணியுடன் இணைந்தால் அவர் பங்கேற்பார். இல்லையெனில் அவர் டெஸ்ட் தொடரில் இருந்தே விலக்கப்படுவார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்துள்ள இந்திய அணிக்கு இது மோசமான செய்தியாக அமைந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல் களத்தில் அனைவரையும் ஆக்ரோஷமான குணத்துடன் வைத்துக் கொள்வார். மூத்த வீரராக கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பல முக்கிய ஆலோசனைகளை வழங்குவார். எனவே, அவர் பங்கேற்காமல் போனால் என்ன நடக்குமோ என ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஏற்கனவே விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.