அடிச்சான் பாரு ஒரு சிக்ஸ்.. ரன் மெஷின்.. இங்கிலாந்தை கதற விட்ட ஜெய்ஸ்வால்.. கொண்டாடிய ரசிகர்கள்
விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கை விட்ட நிலையில், துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடி சதம் அடித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி ஆடிய ஜெய்ஸ்வால் சிக்ஸ் அடித்து தன் இரண்டாவது டெஸ்ட் போட்டி சதம் கடந்தார். அதைத் தொடர்ந்து தன் ரன் குவிப்பை தொடர்ந்த அவர் 150 ரன்களை தாண்டியும் ரன் குவித்தார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று ஆடியது. முதல் டெஸ்ட் போல இல்லாமல் பேட்டிங்கில் இந்த முறை 500 - 600 ரன்கள் குவிக்க வேண்டும் என திட்டமிட்டது இந்திய அணி.

துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் வழக்கத்தை விட நிதான ஆட்டம் ஆடினர். அது ஜெய்ஸ்வாலுக்கு கை கொடுத்தது. அவர் முதலில் சில ஓவர்கள் நிதான ஆட்டம் ஆடி விட்டு பின் இங்கிலாந்து பவுலர்களை குறி வைத்து பவுண்டரி அடிக்கத் துவங்கினார். அதே சமயம், ரோஹித் சர்மா 14, சுப்மன் கில் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.
விக்கெட்கள் ஒரு பக்கம் விழுந்தாலும் ஜெய்ஸ்வால் அசராமல் பேட்டிங்கை தன் கையில் எடுத்துக் கொண்டு அதிரடி ஆட்டம் ஆடினார். 151 பந்துகளில் தன் இரண்டாவது டெஸ்ட் போட்டி சதம் அடித்தார் ஜெய்ஸ்வால். அதிலும் சிக்ஸ் அடித்து தன் சதத்தை அவர் நிறைவு செய்தார். அதன் பின்னும் அவர் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். சதம் அடிக்கும் வரை மட்டுமே அவர் 3 சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் விக்கெட்டை எடுக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது. அதன் பின்பும் ரன் குவிப்பை தொடர்ந்து 150 ரன்களையும் தாண்டினார்.
ஜெய்ஸ்வால் சதம் அடித்ததை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஜெய்ஸ்வால் தனி ஆளாக அணியின் ஸ்கோரை உயர்த்தி வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் அவரை பாராட்டி பதிவுகள் குவிந்து வருகின்றன.
முதல் நாள் ஆட்டம் முடியும் வரை களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் 257 பந்துகளில் 179 ரன்கள் குவித்து இருக்கிறார். இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.


Click it and Unblock the Notifications