IND vs ENG: கடும் வலி.. செஞ்சுரி.. இதெல்லாம் எனக்கு சகஜம்.. இங்கிலாந்தை கதறவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்
லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்பாக ஆடி சதம் அடித்தார். அவர் பேட்டிங் செய்தபோது இரண்டு கைகளிலும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதனால் வலியால் அவதிப்பட்ட அவர், அடிக்கடி இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட்டை அழைத்து முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டே பேட்டிங் செய்தார்.
அப்படி வலியுடன் பேட்டிங் செய்த அவர், அபாரமாக ஆடி 101 ரன்கள் குவித்து சதம் அடித்து ஆட்டமிழந்தார். அவரது சிறப்பான தொடக்கத்தால் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அவருக்கு அடுத்து நான்காம் வரிசையில் வந்த கேப்டன் சுப்மன் கில்லும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

தனது தசைப்பிடிப்பு குறித்துப் முதல் நாள் ஆட்டத்துக்கு பிறகு பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், "எனக்கு இரண்டு கைகளிலும் தசைப்பிடிப்பு இருந்தது. போட்டிகளில் இதுபோல நடப்பது சகஜம்தான். நான் எனது ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ளத் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். சுப்மன் கில்லுடன் பேட்டிங் செய்தது நன்றாக இருந்தது. அவருடன் நான் அதிக விருப்பத்துடன் பேட்டிங் செய்தேன்" என்றார்.
ஜெய்ஸ்வால் களத்தில் இருந்தவரை இங்கிலாந்து அணி விக்கெட் வீழ்த்த முடியாத அழுத்தத்திலும், ரன்கள் சென்று கொண்டே இருப்பதை பார்த்தும் தவித்தது. சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் மூன்றாவது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தனர். அது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்தது.
ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்த பிறகு வந்த ரிஷப் பன்ட் பொறுப்பாக ஆடினார். அவர் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 65 ரன்கள் எடுத்திருந்தார். சுப்மன் கில் 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 85 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தில் 500 ரன்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications