"வைபவ் சூர்யவன்ஷியிடம் கவனமாக இருங்க சஞ்சு.. இல்லைனா".. சீனியர் வீரருக்கு மஞ்ச்ரேக்கர் வார்னிங்
பெல்பாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பெல்ஃபாஸ்ட்டில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 183 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் பெரும் ஏமாற்றம் அளித்தார்.
2026 டி20 உலகக்கோப்பையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன், இப்போட்டியில் வெறும் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 5 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சனின் இந்த சொதப்பலான ஆட்டத்திற்குப் பிறகு கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை சுட்டிக்காட்டி சஞ்சு சாம்சன் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து மஞ்ச்ரேக்கர் கூறுகையில், "சஞ்சு சாம்சன் இனி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் இடங்களுக்குக் கடுமையான போட்டியை அளித்து வருகிறார். ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 776 ரன்கள் குவித்து வைபவ் சூர்யவன்ஷி அசத்தியுள்ளார். முதல் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடி இருந்தால் பவர்பிளேயில் இன்னும் சற்று சிறப்பாகச் செயல்பட்டிருக்கக் கூடும். ஆனால், தற்போதைய நிலையில் டாப் ஆர்டரில் அவருக்கான இடம் காலியாக இல்லை என்பதால் அவர் காத்திருக்க வேண்டியுள்ளது" என்றார்.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்துப் பேசிய முன்னாள் வீரர் பால் வால்தாட்டி, இந்திய அணி பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் செய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினும், பந்துவீச்சை பலப்படுத்த லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோயை ஆடும் லெவனில் சேர்க்கலாம் என்றும், அவர் 6-வது ஓவருக்குப் பிறகு அணிக்கு சிறந்த பந்துவீச்சு விருப்பமாக இருப்பார் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications

