IND vs IRE: “வைபவ் சூர்யவன்ஷி.. உனக்கு இதுதான் முதல் வேலை”.. கம்பீர் கொடுத்த 'ஸ்பெஷல்' டியூட்டி!
பெல்பாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக அயர்லாந்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்றுத் தோல்விக்கு மத்தியில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வியூகங்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகின. குறிப்பாக, 15 வயதே ஆன இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு கம்பீர் கொடுத்த முதல் நாள் டியூட்டியும் கவனம் பெற்றுள்ளது.
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், அண்மையில் இந்தியா ஏ அணிக்காக 29 பந்துகளில் 94 ரன்கள் விளாசியும் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், கம்பீரின் மாஸ்டர் பிளானில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு தரப்படவில்லை; மாறாக மைதானத்திற்குள் சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை தூக்கிச் செல்லும் 'வாட்டர் பாய்' வேலை தான் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா போன்ற சீனியர்களை ஆதரிப்பதாகக் கூறினார். ஆனால், சாம்சன் 5 ரன்களிலும், இஷான் கிஷன் 1 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் 3 ரன்னிலும் அவுட்டாகி சொதப்பினர். இதைப் பார்த்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், "தற்போது உலகின் மிகச்சிறந்த டி20 வீரரான சூர்யவன்ஷியை இந்திய அணி தேர்வு செய்யாததை நம்பவே முடியவில்லை" என எக்ஸ் தளத்தில் நக்கலாகப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் 183 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா 148 ரன்களுக்கு சுருண்டது. கம்பீரின் இந்த புதிய வியூகத்தால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், "கம்பீரை நீக்குங்கள்" என சமூக வலைதளங்களில் கோஷமிடத் தொடங்கியுள்ளனர். அதே சமயம் வைபவ் சூர்யவன்ஷியை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்றால் அபிஷேக் சர்மா அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவரை நீக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை உள்ளது.
இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்து இருந்தார். சஞ்சு சாம்சன் இதற்கு முன் டி20 உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். எனவே, வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க முடியாத நிலை உள்ளதாக இந்திய அணி வட்டாரம் கூறுகிறது.


Click it and Unblock the Notifications
