நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவே இந்திய அணியின் முதல் போட்டி.
நியூயார்க்கின் நாசா கவுண்டி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதே மைதானத்தில் தான் இந்திய அணி தனது குரூப் சுற்றின் முதல் மூன்று போட்டிகளில் விளையாட உள்ளது. இங்கு நான்கு பிட்ச்கள் உள்ளன. இவை அனைத்துமே தற்காலிகமான பிட்ச்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்பட்டவை. இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி எந்த பிட்ச்சில் நடைபெறும் என்ற விவரம் எந்த அணிக்கும் தெரிவிக்கப்படவில்லை. இதுதான் இந்திய அணிக்கு பெரிய வில்லங்கமாக மாறி உள்ளது.

இங்கு நடந்த முதல் குரூப் சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அந்தப் போட்டியில் இரண்டு அணிகளுமே பேட்டிங் செய்ய திணறின. கிட்டத்தட்ட டெஸ்ட் போட்டி போலவே நடந்தது அந்தப் போட்டி. இலங்கை அணி வெறும் 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதேபோல அதை சேஸிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி தட்டுத் தடுமாறி நான்கு விக்கெட்களை இழந்து, 17வது ஓவரில் தான் வெற்றி பெற்றது. அதை வைத்து இந்த நான்கு பிட்ச்களில் சில பிட்ச்கள் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்காது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா - அயர்லாந்து போட்டி எந்த பிட்ச்சில் நடைபெறும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்தியா, வங்கதேசம் ஆடிய பயிற்சி போட்டி இதே மைதானத்தில் தான் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்திருந்தது. அதே போன்ற பிட்ச் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணிக்கு கிடைக்க வேண்டும்.
மாறாக நிலையற்ற தன்மை கொண்ட பிட்ச்சில் இந்தியா -அயர்லாந்து போட்டி நடந்தால் இந்திய அணியின் நிலைமை மிக மோசமாக மாறிவிடும். அது போன்ற பிட்ச்களை புரிந்து கொண்டு எவ்வளவு ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என திட்டமிட்டு பேட்டிங் செய்யவில்லை என்றால் போட்டியில் தோல்வி தான் கிடைக்கும். உதாரணத்திற்கு 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்திய அணி பிட்ச்சை புரிந்து கொள்ளாமல் 240 ரன்கள் எடுத்தால் போதும் என முடிவு செய்து, பின்னர் தோல்வி அடைந்தது.
2024 டி20 உலக கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகள் அனைத்திலும் பேட்டிங் செய்ய அனைத்து அணிகளுமே தடுமாறி உள்ளன. இது போன்ற பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் கத்துக்குட்டி அணியோ, அனுபவ அணியோ போட்டி யார் பக்கம் வேண்டுமானாலும் மாறும். எனவே, இந்திய அணி எந்த பிட்ச் தங்களுக்கு வழங்கப்படும் என்ற பீதியுடனே முதல் போட்டியில் ஆட உள்ளது.