பெங்களூர் : நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 410 ரன்கள் குவித்த நிலையில், இது இயல்பாக ஒரு நடந்த விஷயமே இல்லை. இதன் பின்னணியில் பல மாத திட்டம் உள்ளதாக சில ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மொத்தம் ஒன்பது லீக் போட்டிகளில் ஆட வேண்டிய நிலையில், முதல் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று கடைசி லீக் போட்டியில் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்து அணியை சந்தித்தது. இதில் முக்கிய விஷயம் இந்தப் போட்டி தீபாவளி அன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் எப்படியும் இந்திய அணி பெரிய அளவில் ரன் குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதே போலவே இந்திய அணி 410 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எடுத்தது. அது தீபாவளிப் பரிசாகவும் அமைந்தது. ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி அரைசதம் அடித்தனர். ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் அதிரடி சதம் அடித்தனர்.
இப்படி இந்திய அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களும் 50 ரன்களுக்கும் மேல் அடித்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் இதை செய்த இரண்டாவது அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியா இத்தனை பெரிய ஸ்கோர் அடிப்பது என்பது முன்பே திட்டமிட்ட ஒரு விஷயம் தான் என சிலர் சொல்வது எப்படி?
2023 உலகக்கோப்பை தொடரை ஐசிசியுடன் இணைந்து இந்தியாவின் கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ நடத்துகிறது. உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை தயார் செய்ததிலும் பிசிசிஐ பங்கே அதிகம். இந்த நிலையில் தெளிவாக தீபாவளி அன்று இந்தியா சிறிய அணியான நெதர்லாந்து அணியை சந்திக்க வேண்டும் என்ற திட்டத்தை போட்டுள்ளது.
அதன் மூலம், தீபாவளி அன்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எந்த ஏமாற்றத்துக்கும் ஆளாகாமல் இந்தியா வெற்றி பெறுவதை கண்டு களிக்கலாம் என்பதே பிசிசிஐயின் திட்டம்.
மேலும், எப்படியும் நெதர்லாந்து அணிக்கு எதிராக அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல், முகமது ஷமி, பும்ரா போன்றோர் தங்கள் திறமையை காண்பித்தால் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக ரன்கள், விக்கெட்கள் கிடைக்கும் என்பதை எல்லாம் திட்டமிட்டே பிசிசிஐ நெதர்லாந்து அணியை, தீபாவளி அன்று இந்தியாவுடன் ஆட வைத்துள்ளது. 410 ரன்கள் அடித்து பிசிசிஐயின் திட்டத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் கனகச்சிதமாக நிறைவேற்றினர்.
மேலும், எதிர்பார்த்தது போலவே இந்திய அணி இந்தப் போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. இந்திய அணி பேட்டிங்கில் எந்த விஷப் பரிட்சையும் செய்யாத நிலையில், பந்துவீச்சின் போது விராட் கோலி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா என நான்கு வீரர்கள் பகுதி நேர பந்துவீச்சாளர்களாக சில ஓவர்களை வீசினர். இதில் ஆச்சரியமாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தி பந்துவீச்சிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.