பெங்களூர் : இந்தியா - நெதர்லாந்து அணிகள் இடையே ஆன போட்டியில் இந்திய அணி பெற்ற பெரிய வெற்றியை விட விராட் கோலி, ரோஹித் சர்மா அளித்த தீபாவளிப் பரிசு தான் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்தப் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. அங்கே சிறிய மைதானம் என்பதால் இந்தியா பெரிய அளவில் ரன் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல, இந்தியா பேட்டிங் செய்து 410 ரன்கள் குவித்தது.

ரோஹித் சர்மா, விராட் கோலி சதம் அடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரோஹித் சர்மா 61 ரன்களும், விராட் கோலி 51 ரன்களும் மட்டுமே எடுத்தனர். சுப்மன் கில் 51 ரன்கள் எடுத்தார். ஆனால், மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் 94 பந்துகளில் 128 ரன்கள் அடித்தார். கே எல் ராகுல் அதிரடி ஆட்டம் ஆடி 64 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார்.
இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்கள இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது. அடுத்து நெதர்லாந்து அணி பேட்டிங் செய்ய வந்த போது முகமது சிராஜ் பீல்டிங் செய்த போது ஏற்பட்ட சிறிய அசௌகரியத்தால் மைதானத்தை விட்டு வெளியேறிய நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலியை பந்து வீச அழைத்தார்.
நீண்ட காலம் கழித்து விராட் கோலி ஒரு முழு ஓவரை வீச இருக்கிறார் என்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர் தன் இரண்டாவது ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தி முதல் தீபாவளிப் பரிசை அளித்தார். அடுத்து பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் என முதல் நிலை பந்துவீச்சாளர்கள் விக்கெட்கள் வீழ்த்திய போதும், மறுபக்கம் சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் என பகுதி நேர பந்துவீச்சாளர்களை பரிசோதனை செய்து வந்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
47 ஓவர்களில் நெதர்லாந்து அணி இலக்கை எட்ட முடியாத நிலையில், 9 விக்கெட்களை இழந்து இருந்த போது ரோஹித் சர்மா பந்து வீச வந்தார். அவர் அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நெதர்லாந்து அணி 250 ரன்கள் எடுத்து ஆல் - அவுட் ஆகி இருந்தது.,
இந்தப் போட்டியில் இந்தியா எப்படியும் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ஒரே போட்டியில் நீண்ட காலம் கழித்து பந்துவீசி விக்கெட் வீழ்த்தி ரசிகர்களுக்கு டபுள் தீபாவளிப் பரிசை அளித்தனர்.