அகமதாபாத்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய இருக்கின்றோம். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. இதனால் முதலில் ரன்கள் குவித்து பின் அதனை தற்காத்துக் கொள்ள நாங்கள் முடிவெடுத்து இருக்கின்றோம்.

இதன் மூலம் எங்கள் பௌலர்களுக்கு கொஞ்சம் நெருக்கடி ஏற்படும். பெரிய போட்டிகளுக்கு முன்பு அவர்கள் பழகிக் கொள்வார்கள். எங்கள் அணியின் உள்ள சூழல் சிறப்பாக இருக்கின்றது. நாங்கள் நினைக்கும் கிரிக்கெட்டை களத்தில் விளையாடுகின்றோம். நான் எதிர்பார்ப்பதை எங்கள் அணி வீரர்கள் களத்தில் செயல்படுகிறார்கள்.
ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவரும் வெற்றிக்காக பங்களிப்பு தருவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். குல்தீப் யாதவுக்கு பதில் ஆர்ஸ்தீப் சிங் வந்திருக்கிறார். அதேபோன்று அக்சர் பட்டேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைத்திருக்கிறது என்று சூர்ய குமார் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய நெதர்லாந்து அணி கேப்டன் எட்வார்ட்ஸ், நாங்களும் முதலில் பேட்டிங் தான் செய்ய இருந்தோம். இந்தியாவில் விளையாடுவது உண்மையிலே மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணி வீரர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.
அதுவும் இது போன்ற மைதானத்தில் எங்கள் தொடரை நாங்கள் முடிப்பது ஒரு நல்ல வாய்ப்பாக நாங்கள் கருதுகின்றோம். இந்தியாவில் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக அற்புதமாக இருக்கின்றது. இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் தங்களுடைய முழுத் திறணை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். எங்கள் அணியில் இன்று ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கிளாசுக்கு பதிலாக க்ரூஸ் அணிக்குள் இணைந்து இருக்கிறார் என்று தெரிவித்தார்.