வதோதரா: இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்து, வதோதரா மைதானத்தில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர். டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் முடிவை, காலி செய்யும் வகையில் நியூசிலாந்து துவக்க வீரர்கள் ரன் குவித்தனர்.
வதோதரா, கோட்டாம்பி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆரம்பம் முதலே நியூசிலாந்து அணியின் ஆதிக்கம் இருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவன் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் ஜோடி, இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. விக்கெட் விழும் என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பொறுப்புடனும், அதே சமயம் தேவையான நேரத்தில் அதிரடியாகவும் ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களைக் குவித்தது. இடதுகை பேட்ஸ்மேன்களான இருவரும் ஆடுகளத்தின் தன்மையை நன்கு கணித்து விளையாடினர்.
டேவன் கான்வே 67 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 83.58 என்பதாக இருந்தது. ஹென்றி நிக்கோல்ஸ் 69 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். அவர் 8 பவுண்டரிகள் அடித்து இருந்தார். இந்த 117 ரன் பார்ட்னர்ஷிப் மூலம் கான்வே - நிக்கோல்ஸ் ஜோடி சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு அமைந்த 2-வது மிகப்பெரிய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
இதற்கு முன் 1988-ம் ஆண்டு இதே வதோதரா மண்ணில் ஆண்ட்ரூ ஜோன்ஸ் மற்றும் ஜான் ரைட் ஜோடி 140 ரன்கள் குவித்ததே சாதனையாக உள்ளது. அந்தச் சாதனையை இவர்கள் நெருங்கி வந்தாலும், முறியடிக்க முடியவில்லை. எனினும், 1999-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நாதன் ஆஸ்லே மற்றும் கிரைக் ஸ்பியர்மேன் அமைத்த 115 ரன் பார்ட்னர்ஷிப் சாதனையை இவர்கள் முறியடித்தனர்.
இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் தவித்த நிலையில், இளம் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாதான் இந்திய அணிக்கு முதல் விக்கெட் எடுத்துக் கொடுத்தார். 22-வது ஓவரில் நிக்கோல்ஸை வெளியேற்றிய ராணா, சிறிது நேரத்திலேயே கான்வேயையும் போல்ட் ஆக்கி வெளியேற்றினார். செட் ஆன இரண்டு பேட்ஸ்மேன்களையும் அவரே காலி செய்ததால் இந்திய அணி சற்று நிம்மதி பெருமூச்சு விட்டது.
முகமது சிராஜ் சிக்கனமாக வீசினாலும் விக்கெட் கிடைக்கவில்லை. பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரால் நியூசிலாந்து ஜோடியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அர்ஷ்தீப் சிங் அணியில் இல்லாத குறையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
நியூசிலாந்து அணி 42 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்து உள்ளது. அப்போது மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் டேரில் மிட்செல் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்தாலும், இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், சேசிங்கில் இந்திய அணிக்கு அது சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.