மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் பல பரிட்சை நடத்துகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி ஆடுகளத்தால் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக பேசிய அவர் ஆடுகளம் போகப் போக தோய்வு அடையும் என எதிர்பார்க்கிறேன். இதனால் முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவிக்க நாங்கள் முயற்சி செய்வோம். நாங்கள் என்ன செய்ய போகிறோமோ அதை நன்றாக செய்ய வேண்டும்.

2019 ஆம் ஆண்டு நாங்கள் இதே அணியை தான் அரை இறுதியில் எதிர்கொண்டோம். நியூசிலாந்து அணி எப்போதுமே சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இன்று எங்களுக்கு மிகவும் முக்கியமான நாள். அதற்காக நம்மால் எதை கட்டுப்படுத்த முடியுமோ, அதை கட்டுப்படுத்தினால் மட்டுமே போதும். இந்த தொடர் முழுவதும் நாங்கள் நன்றாக விளையாடி இருக்கிறோம்.
ஆனால் அதை அனைத்தையும் மறந்து விட்டு இது ஒரு புதிய நாளாக எண்ணி இந்த போட்டியில் களமிறங்க வேண்டும். எங்கள் அணியில் நான் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய நியூசிலாந்து வீரர் வில்லியம்சன், நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம். இந்த ஆடுகளம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒன்று போல் இருக்கிறது.
பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என நம்புகிறேன். இரவு பொழுதில் பனிப்பொழிவு இருக்கும் என்றும் நம்புகிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஒரு சூழலில் வேறு ஒரு இடத்தில் நாங்கள் இருவரும் மோதினோம். இந்தியாவும் தற்போது சமீப காலமாக சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. எங்களுக்கு இருக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்று கணக்கிட்டு விளையாட வேண்டும்.
இன்றைய ஆட்டத்தில் நாங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்தியாவை பொறுத்தவரை தோய்வான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வது சிறப்பான விஷயமாக பார்க்கப்பட்டாலும் மாலையில் பனிப்பொழிவு இருந்தால் அது நிச்சயம் நியூசிலாந்துக்கு சாதகமாக மாறிவிடும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பனிப்பொழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது இந்தியாவுக்கு ஒரு ஆபத்தாக பார்க்கப்படுகிறது.