Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: உலகக்கோப்பை பைனலில் 7 வெற்றி, 7 தோல்வி.. இந்திய அணியின் இறுதிப்போட்டி வரலாறு இதுதான்

அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்தப்போட்டியில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது 15வது ஐசிசி இறுதிப்போட்டியாகும். இதற்கு முன்பு இந்திய அணி விளையாடிய 14 இறுதிப்போட்டிகளில் 7 முறை வெற்றியும், 7 முறை தோல்வியும் அடைந்துள்ளது. கபில் தேவ் முதல் ரோகித் சர்மா வரையிலான காலகட்டத்தில் இந்திய அணி சந்தித்த இறுதிப்போட்டி வரலாற்றை இங்கே விரிவாகக் காண்போம்.

India vs New Zealand 2026 T20 World Cup Final Can India Break the 7-7 ICC Trophy Deadlock

கபில் தேவ் முதல் தோனி வரை

இந்திய அணி தனது முதல் ஐசிசி இறுதிப்போட்டியை 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் விளையாடியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை இந்தியா வென்றது.

அதன்பிறகு 2002ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மழையால் ரத்தானதால், இலங்கையுடன் கோப்பையை இந்தியா பகிர்ந்து கொண்டது. பின்னர் தோனி தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பைகளைக் குவிக்கத் தொடங்கியது. 2007ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

தொடர்ந்து 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றது. கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தோனி தலைமையிலான அணி சாதனை படைத்தது.

கண்ணீர் வரவழைத்த தோல்விகள்

வெற்றிகள் ஒருபுறம் இருந்தாலும், இறுதிப்போட்டியில் இந்திய அணி சந்தித்த தோல்விகள் ரசிகர்களுக்கு மிகுந்த வலியைத் தந்துள்ளன. 2000ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடமும், 2003 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடமும் இந்தியா தோல்வியைத் தழுவியது. 2014 டி20 உலகக் கோப்பையில் இலங்கையிடமும், 2017 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானிடமும் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி பலமுறை இறுதிப்போட்டிக்குச் சென்றாலும், கடைசி நேரத்தில் சறுக்கியது. குறிப்பாக 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடமும், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடமும் இந்தியா தோல்வியடைந்தது. குறிப்பாக 2023இல் இதே அகமதாபாத் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் வாங்கிய அடி இன்னும் ரசிகர்கள் மனதிலிருந்து நீங்கவில்லை.

சமீபத்திய எழுச்சி

தொடர் தோல்விகளுக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. கடந்த 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான அணி கோப்பையை வென்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 2025ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.

இப்போது நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியையும் சேர்த்தால் இந்தியா விளையாடும் 15வது ஐசிசி இறுதிப்போட்டி இதுவாகும். இதுவரை 7 வெற்றி, 7 தோல்வி எனச் சம நிலையில் உள்ள வரலாற்றை, இன்றைய வெற்றியின் மூலம் இந்தியா தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக 2000 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததற்கு, கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் பதிலடி கொடுத்தது போல, இன்றும் இந்தியா பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Story first published: Sunday, March 8, 2026, 11:47 [IST]
Other articles published on Mar 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+