டைவ் அடித்து சிக்சை தடுத்த சஞ்சு சாம்சன்... ரசிகர்கள் அளித்த பெஸ்ட் பீல்டர் அவார்டு
Recommended Video
மவுண்ட் மாங்கானுய் : நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா முதலில் மோதிய சர்வதேச டி20 தொடரில் ஐந்துக்கு ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இமாலய சாதனை புரிந்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 163 ரன்களே அடித்திருந்த போதிலும் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பௌலிங் மற்றும் சிறப்பான பீல்டிங் மூலம் ஐந்தாவது போட்டியிலும் தனது வெற்றியை இந்தியா அடைந்துள்ளது.
இந்தப் போட்டியில் இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் அவர் சிறப்பான பேட்டிங்கை பதிவு செய்யவில்லை. ஆயினும் அவரது பீல்டிங் ஒன்றின்மூலம் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

இமாலய சாதனை புரிந்த இந்தியா
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நியூசிலாந்துடன் முதலில் மோதிய சர்வதேச டி20 தொடரில் 5க்கு 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று இமாலய சாதனை புரிந்துள்ளனர். இதுபோன்று 5 போட்டி கொண்ட சர்வதேச டி20 தொடரில் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணி சர்வதேச அளவில் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் ரோகித் சர்மா
இந்தப் போட்டியில் விராட் கோலிக்கு ஒய்வளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் 60 ரன்களை ரோகித் சர்மா குவித்த நிலையில் சர்வதேச டி20 போட்டிகளில் 25 முறை அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் புரிந்துள்ளார். இன்றைய ஆட்டத்தின்மூலம் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

8 மற்றும் 2 ரன்களை அடித்து ஏமாற்றம்
இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளிலேயே வெற்றியை உறுதி செய்த இந்திய அணி, திறனறியும் முயற்சியாக அடுத்தடுத்த போட்டிகளில் சஞ்சு சாம்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. ஆனால் சஞ்சு சாம்சன் இந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார். கடந்த போட்டியில் 8 ரன்களை அடித்த அவர், இன்றைய போட்டியில் 5 பந்துகளுக்கு 2 ரன்களை அடித்து ஸ்காட் குஜிலியன் பந்தில் ஆட்டமிழந்தார்.

கவனத்தை கவர்ந்த சாம்சன்
ஆட்டத்தில் சொதப்பினாலும் பீல்டிங்கில் அனைவரது கவனத்தையும் சாம்சன் கவர்ந்துள்ளார். இன்றைய போட்டியில் 8வது ஓவரில் நியூசிலாந்து வீரர் அடித்த சிக்சை பாய்ந்து தடுத்து, அதை காற்றிலேயே திருப்பி அடித்து, அனைவரையும் கவர்ந்தார் சஞ்சு சாம்சன். அவரது சமயோசிதமான இந்த செயல்பாடு சக வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.


Click it and Unblock the Notifications