நீங்க கிளம்பலாம் சார்.. புவனேஷ்வர் குமாருக்கு கெடு விதித்த பிசிசிஐ.. வாழ்வா? சாவா? போராட்டம்!
அடிலெய்ட்: இந்திய அணியில் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய வாழ்வா? சாவா? கட்டத்தில் புவனேஷ்வர் குமார் சிக்கியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமான தோல்வியுடன் வெளியேறிய இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயும் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இதில் நாளை முதல் ( நவம்பர் 18 ) டி20 தொடர் நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து போட்டி
இந்த டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படவிருக்கிறார். ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. சுப்மன் கில், இஷான் கிஷான், வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

புவனேஷ்வர் குமாருக்கு சிக்கல்
இந்நிலையில் இதில் சீனியர் வீரரான புவனேஷ்வர் குமாருக்கு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் முதன்மை பவுலராக செயல்பட்ட அவர், வெறும் 4 விக்கெட்களை மட்டுமே எடுத்தார். மற்றொரு பவுலரான அர்ஷ்தீப் சிங் 10 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். எனவே இனியும் டி20 அணிக்கு புவனேஷ்வர் குமார் தேவையா? என்ற விவாதங்கள் எழத் தொடங்கிவிட்டது.

கடும் மோதல்
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்காக ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஏற்கனவே திட்டத்திற்குள் இணைந்துவிட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக், தீபக் சஹார் போன்ற வீரர்கள் போட்டிப்போட்டு வருகின்றனர். இவர்களுடன் மோதி தான் புவனேஷ்வர் குமார் வெற்றி பெற வேண்டும்.

கடைசி கட்ட வாய்ப்பு
32 வயதாகும் புவனேஷ்வர் குமாருக்கு இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கலாம். இதில் அவர் தன்னை நிரூபித்தால் மட்டுமே அடுத்தகட்ட போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால் ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் தான், அவரின் இடத்தை புவனேஷ்வர் குமார் போன்ற சீனியர் வீரர் நிரப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications