T20 WC Final: 3 உலகக்கோப்பை ரெக்கார்டுகளை நொறுங்கிய இந்திய அணி.. நியூசிலாந்து ஆட்டம் குளோஸ்
அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி ஆட்டம் ஆடியது. நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பல புதிய சாதனைகளை இந்திய அணி படைத்துள்ளது. குறிப்பாகப் பவர் பிளே ஓவர்களில் இந்திய வீரர்கள் காட்டிய அதிரடி, இறுதிப்போட்டி வரலாற்றிலேயே ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
முதல் 6 ஓவர்கள் பவர்பிளேயில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்தது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுவே அதிகபட்ச பவர்பிளே ஸ்கோர் ஆகும். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் 1 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்தது அதிகமாக இருந்தது. அதை சமன் செய்து இருக்கிறது இந்திய அணி.

நாக் அவுட் போட்டிகளில் அதிவேக சதம்
இந்தப் போட்டியில் இந்திய அணி வெறும் 7.2 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்து பிரம்மாண்ட சாதனை படைத்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நாக் அவுட் போட்டிகளில் (அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி) இவ்வளவு விரைவாக எந்த அணியும் 100 ரன்களை எட்டியதில்லை. இதற்கு முன்பு, இதே தொடரில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 7.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையைத் தற்போது இந்திய அணி முறியடித்துள்ளது. மேலும், ஒரு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பவர் பிளே ஸ்கோர் இதுவாகும்.
முதல் 10 ஓவர்களில் ரன் மழை
தொடக்கம் முதலே வாணவேடிக்கை காட்டிய இந்திய அணி, முதல் 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 127 ரன்களைக் குவித்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸகோர் இதுவாகும். நெதர்லாந்து அணி அயர்லாந்துக்கு எதிராக 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்ததே முதலிடத்தில் உள்ளது. ஒரு இறுதிப்போட்டி என்று கூடப் பார்க்காமல் இந்திய அணி இத்தகைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இந்தச் சாதனைகளுக்கு முக்கியக் காரணம் தொடக்க வீரர்கள் அமைத்த வலுவான அடித்தளம்தான். இளம் வீரர் அபிஷேக் சர்மா நியூசிலாந்து பந்துவீச்சைச் சின்னாபின்னமாக்கி வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சஞ்சு சாம்சனும் தனது வழக்கமான அதிரடியைத் தொடர்ந்து அரைசதம் கடந்தார். இவர்களின் அதிரடியால் இந்திய அணி மிக விரைவாக ரன்களைச் சேர்த்தது. அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய இஷான் கிஷனும் அதிரடியின் உச்சத்தில் ரன் குவித்ததால், நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் நிலைகுலைந்து போயினர்.


Click it and Unblock the Notifications