ராய்ப்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, துவக்க வீரர் இஷான் கிஷன் அதிரடி அடித்தளம் அமைத்து கொடுத்தார். வெறும் 32 பந்துகளில் 76 ரன்கள் விளாசிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
போட்டிக்கு பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், "இஷான் கிஷன் மதிய உணவின் போது என்ன சாப்பிட்டார் என்று தெரியவில்லை, இப்படி வெளுத்து வாங்குகிறார்" என்று கிண்டலாக பாராட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த இஷான் கிஷன்:

"நான் மதியம் விசேஷமாக ஒன்றும் சாப்பிடவில்லை. வழக்கமான உணவைத்தான் சாப்பிட்டேன். ஆனால் இன்றைய போட்டியில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தேன். மனதளவில் மிகவும் உற்சாகமாகவும், தெளிவான சிந்தனையுடனும் களமிறங்கினேன். பந்தை நன்கு கவனித்து, அதற்கு ஏற்றவாறு நல்ல ஷாட்களை ஆட வேண்டும் என்பது மட்டுமே என் திட்டமாக இருந்தது" என்று கூறினார்.
தனது பேட்டிங் அணுகுமுறை குறித்து பேசிய அவர், "நாங்கள் தேவையில்லாத ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. குறுக்காக ஆடும் ஷாட்களை தவிர்த்துவிட்டு, நேர்த்தியான கிரிக்கெட் ஷாட்களை ஆட முடிவு செய்தோம். 200 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கை துரத்தும்போது, பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் குவிப்பது மிக அவசியம். முதல் பந்திலிருந்தே பந்து எனது பேட்டில் நன்றாக படுவதை உணர்ந்தேன். அதனால் என் மீது நம்பிக்கை வைத்து, பவர் பிளேயில் முடிந்தவரை ரன் குவித்தேன். இது அணிக்கு உதவியாக இருந்தது" என்று தெரிவித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியது மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடியது குறித்து இஷான் கிஷன் உருக்கமாக பேசினார். "சில நேரங்களில் நம் திறமை மீது நமக்கே கேள்விகள் எழும். நான் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட தகுதியானவனா? என்னால் மீண்டும் பழையபடி சாதிக்க முடியுமா? என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அந்த கேள்விகளுக்கு விடை காணவே நான் உள்ளூர் போட்டிகளில் விளையாடினேன்."
"யாரோ ஒருவருக்காக என்பதை விட, எனக்காக நான் ரன் குவிக்க வேண்டும், என் திறமையை எனக்கு நானே நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். உள்ளூர் தொடரில் கோப்பையை வென்றது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. அந்த நம்பிக்கையை இன்று இங்கு களத்தில் என்னால் வெளிப்படுத்த முடிந்தது" என்று இஷான் கிஷன் கூறினார்.