இந்தியா - நியூசிலாந்து 2026 தொடர் அட்டவணை வெளியீடு: தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
மும்பை: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. அதற்கான அட்டவணையை நேற்று பிசிசிஐ (BCCI) வெளியிட்டது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த இரண்டு தொடர்களிலும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டுக்கான இந்திய அணியின் கிரிக்கெட் அட்டவணை முழுமை பெற்றுவிட்டது. அனைத்து மாதங்களிலும் இந்திய அணி தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை மட்டுமே சந்தேகத்தில் உள்ளது. அந்த மாதத்தில் வேறு அணிகளை அழைத்து இந்திய அணி முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான அட்டவணை முழுமையாகி இருக்கும் நிலையில், 2026 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் அட்டவணையை இறுதி செய்யும் பணிகளில் பிசிசிஐ இறங்கியுள்ளது. முதற்கட்டமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.
நியூசிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயண அட்டவணை:
முதல் ஒருநாள் போட்டி - ஜனவரி 11, 2026 - பரோடா - மதியம் 1.30 மணி
2வது ஒருநாள் போட்டி - ஜனவரி 14, 2026 - ராஜ்கோட் - மதியம் 1.30 மணி
3வது ஒருநாள் போட்டி - ஜனவரி 18, 2026 - இந்தூர் - மதியம் 1.30 மணி
முதல் டி20 போட்டி - ஜனவரி 21, 2026 - நாக்பூர் - இரவு 7.00 மணி
2வது டி20 போட்டி - ஜனவரி 23, 2026 - ராய்ப்பூர் - இரவு 7.00 மணி
3வது டி20 போட்டி - ஜனவரி 25, 2026 - குவஹாத்தி - இரவு 7.00 மணி
4வது டி20 போட்டி - ஜனவரி 28, 2026 - விசாக் - இரவு 7.00 மணி
5வது டி20 போட்டி - ஜனவரி 31, 2026 - திருவனந்தபுரம் - இரவு 7.00 மணி
இதில் முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11 அன்றும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 14 அன்றும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜனவரி 18 அன்றும் நடைபெற உள்ளன. இந்த மூன்று போட்டிகளும் பரோடா, ராஜ்கோட் மற்றும் இந்தூர் ஆகிய மூன்று நகரங்களில் பகல்-இரவு போட்டிகளாக நடைபெற உள்ளன.
அடுத்து, முதல் டி20 போட்டி ஜனவரி 21 முதல் தொடங்கி, ஜனவரி 31 வரை மொத்தம் ஐந்து டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஐந்து போட்டிகளும் நாக்பூர், ராய்ப்பூர், கௌஹாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஐந்து நகரங்களில் நடைபெற உள்ளன. இதில் ஒரு போட்டி கூட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவில்லை என்பது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், சேப்பாக்கம், சின்னசாமி மைதானம் போன்ற முக்கிய மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் நடைபெற்று வருவதால், இந்தத் தொடருக்கு அந்த மைதானங்கள் பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications