மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது. இதில் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் இளம் வீரர் துருவ் ஜூரல் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ஒருநாள் அணியில் கே.எல். ராகுல் முதன்மை விக்கெட் கீப்பராக நீடித்து வருகிறார். அவருக்கு மாற்று வீரராக இத்தனை நாட்களாக ரிஷப் பண்ட் கருதப்பட்டு வந்தார். ஆனால், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) ரிஷப் பண்ட்டின் 'ஷாட் செலக்சன்' (Shot selection) மற்றும் சீரற்ற ஆட்டம் குறித்துத் தேர்வுக் குழு மற்றும் அணி நிர்வாகத்திடம் அதிருப்தி நிலவுவதாகத் தெரிகிறது.

தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாகச் செயல்படும் ரிஷப் பண்ட், 4 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அவரது இந்தச் சுமாரான ஃபார்ம், அவரை அணியிலிருந்து நீக்க ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக, அதிரடி மன்னன் இஷான் கிஷனை மீண்டும் ஒருநாள் அணிக்குள் கொண்டுவரத் தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. உள்நாட்டுத் தொடர்களில் இஷான் கிஷன் வெளிப்படுத்தி வரும் அபாரமான ஆட்டமே இதற்குக் காரணம். சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி கோப்பையை ஜார்கண்ட் அணிக்கு வென்று கொடுத்த அவர், டி20 உலகக்கோப்பை அணியிலும் இடம்பிடித்தார்.
தற்போது விஜய் ஹசாரே தொடரில் மிடில் ஆர்டரில் களமிறங்கி 125 ரன்கள் விளாசித் தனது திறமையை நிரூபித்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்குத் திரும்பும் அவருக்குப் போதிய வாய்ப்புகள் வழங்கத் தேர்வுக் குழு விரும்புவதாகத் தெரிகிறது.
தென்னாப்பிரிக்கத் தொடரில் மாற்று பேட்ஸ்மேனாக அணியில் இருந்தவர் துருவ் ஜூரல். தற்போது கேப்டன் சுப்மன் கில் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்து அணிக்குத் திரும்புவதால், ஜூரல் அணியிலிருந்து விடுவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட வயிற்றுப் பகுதி காயத்திலிருந்து இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA/CoE) மருத்துவக் குழுவிடமிருந்து அவருக்கு இன்னும் முழுமையான உடற்தகுதிச் சான்றிதழ் கிடைக்காததால், அவர் இந்தத் தொடரிலும் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.
நியூசிலாந்து தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய, சனிக்கிழமை அன்று தேர்வுக் குழுவின் ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறவுள்ளது. இதில் கேப்டன் சுப்மன் கில்லும் கலந்துகொள்வார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகே இறுதிப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.