மும்பை : இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா பிட்ச் சூழ்நிலைக்கு நேர் மாறாக பேட்டிங் ஆடினார்.
இந்தப் போட்டி நடந்த மும்பை வான்கடே மைதான பிட்ச், "ஸ்லோ பிட்ச்" என வகைப்படுத்தப்பட்டு இருந்தது. அப்படி என்றால் அதிரடி பேட்டிங் ஆடுவது சற்று கடினம். பந்து மெதுவாக வரும் என்பதால் கணித்து ஆடுவது கடினம்.

அதனால், இந்திய அணி முதல் 10 - 20 ஓவர்கள் நிதான ஆட்டம் ஆட வேண்டும் என பலரும் கூறிய நிலையில், ரோஹித் சர்மா தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு போய் தன் 2.0 அவதாரத்தை எடுத்தார். முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே இறங்கி வந்து பந்தை அடித்தார் ரோஹித்.
சரி, ஏதோ ஒரு முறை அப்படி ஆடினார் என்று பார்த்தால் சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் ட்ரென்ட் போல்ட் வீசிய பந்துகளை தொடர்ந்து பல முறை இறங்கி வந்து அடித்தார் ரோஹித் சர்மா. 3வது ஓவரில் இறங்கி வந்து அவர் அடித்த சிக்ஸ் மறக்க முடியாத ஷாட்டாக அமைந்தது.
6 ஓவருக்கெல்லாம் இந்திய அணி 58 ரன்களை கடந்தது. அப்போது சுப்மன் கில் 14 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இருந்தார். ரோஹித் சர்மா 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து இருந்தார். அதன் பின் 8.2 ஓவரில் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 162.06 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரோஹித் ஆட்டமிழந்த போது இந்தியா 8.2 ஓவரில் 71 ரன்கள் குவித்து இருந்தது.
ரோஹித் இந்த அதிரடி இன்னிங்க்ஸில் நான்கு சிக்ஸ் அடித்து இருந்தார். அதன் மூலம், அவர் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸ் அடித்த கிறிஸ் கெயில் ரெக்கார்டையும் உடைத்தார். ஒரே உலகக்கோப்பை தொடரில் கிறிஸ் கெயில் 26 சிக்ஸ் அடித்து இருந்தார். அதை உடைத்து ரோஹித் சர்மா 27 சிக்ஸர்களை தாண்டினார். அதே போல, ஒட்டுமொத்த உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலிலும் கிறிஸ் கெயிலை முந்தி 50 சிக்ஸர்களை கடந்தார் ரோஹித் சர்மா.