இந்தியா - நியூசிலாந்து தொடருக்கான டெஸ்ட், ODI அணி அறிவிப்பு.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்சி
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முதல் மூன்று போட்டிகளுக்கு முக்கிய வீரர்கள் கொண்ட அணியும், கடைசி இரண்டு போட்டிகளுக்கு நான்கு வீரர்களை மாற்றியும் அணிகளை அறிவித்துள்ளது பிசிசிஐ. இதில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒருநாள் அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியில் காயம் காரணமாக கடந்த சில தொடர்களில் விளையாடாமல் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் முழு உடற்தகுதியோடு அணிக்குத் திரும்பியுள்ளார். சமீபத்தில் ஒருநாள் அணியில் ஆடிய இளம் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜுக்கு இந்திய டெஸ்ட் அணியில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
டெஸ்ட் அணியில் கே.எல். ராகுல் துணை கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார் கேப்டன் சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வரிசையில் களம் காண்கின்றனர். மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கல் மற்றும் தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் தங்களது இடத்தைத் தக்கவைத்துள்ளனர். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரெல் இடம்பெற்றுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோருடன் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியும் உள்ளார். சுழற்பந்து வீச்சுக்கு ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியும் இரண்டு பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் ருதுராஜ் கெய்க்வாட், அக்சர் படேல், நமன் திர், குர்னூர், இஷான் கிஷன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடரின் 4 மற்றும் 5-வது ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், இஷான் கிஷன் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் சுப்மன் கில், அன்ஷுல், பிரசித் கிருஷ்ணா,கே எல் ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டு திலக் வர்மா, குஷாக்ரா, ஆகிப் நபி மற்றும் யஷ் தாக்கூர் ஆகியோர் கடைசி 2 போட்டிகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் 5 ஒருநாள் போட்டிகளிலுமே தொடர்ந்து விளையாட உள்ளனர் என்பது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணி: சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
முதல் 3 போட்டிகளுக்கான ஒருநாள் அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் திர், அன்ஷுல் கம்போஜ், குர்னூர், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.
கடைசி 2 போட்டிகளுக்கான ஒருநாள் அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் திர், ஆகிப், குர்னூர், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், யஷ் தாக்கூர், குல்தீப் யாதவ்.


Click it and Unblock the Notifications
