இந்திய டெஸ்ட் அணியில் ஷமிக்கு மட்டுமில்லை காஷ்மீர் பவுலருக்கும் கல்தா.. தேர்வுக் குழு எடுத்த முடிவு
மும்பை: 2026 நவம்பர் மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் ஜம்மு காஷ்மீர் இளம் வீரர் ஆகிப் நபி ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்தில் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களே அதிகம் உள்ளன. எனவே, நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்காக பிசிசிஐ தேர்வு குழுவினர் 5 வேகப்பந்து வீச்சாளர்களை முதற்கட்ட பட்டியலில் தேர்வு செய்துள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய 5 பேர் மட்டுமே இந்த இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
உள்நாட்டுப் போட்டிகளில் பெங்கால் அணிக்காகவும், சமீபத்திய துலீப் டிராபி அரையிறுதியில் கிழக்கு மண்டலத்திற்காகவும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய முகமது ஷமி மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை டெஸ்ட் தொடரில் மாற்று வேகப் பந்துவீச்சாளராக சேர்க்கப்பட்ட ஆகிப் நபிக்கும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் தொடர்ந்து புறக்கணிகப்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

இதற்கிடையே, நியூசிலாந்து சுற்றுப்பயணம் குறித்தும், அணியின் தேர்வு குறித்தும் மும்பையிலுள்ள பிசிசிஐ உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ், செயலாளர் தேவஜித் சைக்கியா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் தேசிய சிறப்பு பயிற்சி மையத்தின் தலைவர் வி.வி.எஸ்.லக்ஷ்மண், கேப்டன்கள் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் அக்டோபர் 22 அன்று தொடங்கி நவம்பர் 15 வரை 5 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளுடன் நடைபெற உள்ளது. இதன் பின்னர், முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நவம்பர் 19 முதல் 23 வரையிலும், 2-வது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரையிலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

