"டமால் டுமீல்".. WTC ஃபைனல் போட்டியில் காட்டுச் சத்தம்.. மிரட்டும் இடி மின்னல் - மேட்சுக்கு ஆப்பு?
சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு, இப்படியொரு சிக்கல் வந்துவிட்டதே என்று தான் எண்ணத் தோன்றுகிறது. என்னத்த சொல்ல.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை நாளை (ஜூன்.18) எதிர்கொள்கிறது.
முதன்முறை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷி தொடர், கடுமையாக போராடி இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ள இந்திய அணி என்று ஏகப்பட்ட காரணங்களுக்காக இத்தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், அத்தனையையும் மழை காலி செய்துவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.

முதல் நாளே ஸ்வாஹா?
ஆம்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கவுள்ள சவுத்தாம்ப்டனில், அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாளை (ஜூன்.18) போட்டி தொடங்கும் முதல் நாளே இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக accuweather.com தெரிவித்துள்ளது.

ரிசர்வ் நாளுக்கும் ஆப்பு?
அதேபோல், ஜூன் 19ம் தேதி, அதாவது போட்டியின் இரண்டாம் நாள், மழை பெய்ய 60% வாய்ப்புள்ளதாம். மூன்றாவது நாள் அன்று மழை பெய்ய 68% வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 21ம் தேதி மட்டுமே, மழை இருக்காது என்று தெரிகிறது. போட்டியின் கடைசி நாளான ஜூன் 22ம் தேதி மழை பெய்ய 56% வாய்ப்புள்ளது. ரிசர்வ் நாளான, ஜூன் 23ம் தேதியும் மழை ஆட்டத்தில் குறுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்தால்?
இந்த இறுதிப் போட்டிக்கான விதிகளையும் ஐசிசி முன்பே அறிவித்திருக்கிறது. அதன்படி இந்தப் போட்டிக்கு ஒரு ரிசர்வ் நாள் வழங்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஒரு நாள் ஆட்டம் பாதித்தால், அடுத்த நாள் விரைவாக தொடங்க அனுமதிக்கப்படும். அதேசமயம், மாலையில் ஒரு மணி நேரம் வரை கூடுதலாக விளையாடுவது அனுமதிக்கப்படும். மாற்று ஆப்ஷனாக ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஷாக்
எனினும், ரிசர்வ் நாள் பயன்படுத்துவது தொடர்பாக ஐந்தாவது நாளின் கடைசி ஒரு மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இதை மேட்ச் ரெஃபரி இரு நடுவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் 5 நாட்களில் முடிவு எட்டப்படவில்லை என்றால் ரிசர்வ் நாள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று ஐசிசி தெளிவுப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் நிறுத்தம், வேறு சர்வதேச போட்டிகள் இன்றி சோர்வடைந்து இருந்த இந்திய ரசிகர்களுக்கு, வானிலையின் இந்த மிரட்டல் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications