ஆஸி. மாதிரி நியூசி. தொடர் ஈஸி இல்லை.. அவங்க ஊர்ல அவங்க தான் கில்லி.. இந்தியா என்ன செய்யப் போகிறது?
Recommended Video

ஆக்லாந்து : இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு நியூசிலாந்து சென்றுள்ளது.
நியூசிலாந்தில் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது இந்திய அணி. இந்த தொடரின் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

உலகக்கோப்பைக்கு தயார் ஆகும் அணிகள்
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னணி நாடுகளின் அணிகள் தீவிரமாக தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். இந்திய ஜனவரி முதல் மார்ச் வரை ஒருநாள் போட்டிகளில் ஆட திட்டமிட்டு, அதன் முதல் கட்டத்தை ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் நிறைவு செய்துள்ளது.

எளிதாக இருக்காது
அடுத்து 10 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது இந்தியா. அதில் அடுத்த கட்டமாக நியூசிலாந்தில் 5 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது இந்தியா. ஆஸ்திரேலிய தொடர் இந்திய அணிக்கு எளிதாக இருந்தது. ஆனால், நியூசிலாந்து அணியை எளிதாக எடை போட்டு விட முடியாது.

நியூசிலாந்து அணியின் பார்ம்
நியூசிலாந்து அணி தற்போது அட்டகாசமான பார்மில் இருக்கிறது. அந்த அணியில் பல முன்னணி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் போட்டியின் முடிவை தனியாக மாற்றும் திறன் பெற்றவர்கள்.

ஆடுகளம் எப்படி?
நியூசிலாந்து ஆடுகளம் உலகக்கோப்பை நடக்கவுள்ள இங்கிலாந்து அணியின் ஆடுகளங்களை ஒத்து இருக்கும். இந்திய அணிக்கு அது சாதகமான சூழல் அல்ல. மேலும், நியூசிலாந்து அணி தன் சொந்த மண்ணில் வலுவான அணி. கடந்த 2015 உலகக்கோப்பைக்கு பின் அந்த அணி தன் சொந்த மண்ணில் ஆடிய 27 போட்டிகளில் 8 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.

தரவரிசை அபாயம்
இந்தியா தற்போது ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தோல்வி அடையும் பட்சத்தில் உலகக்கோப்பைக்கு முன்னர் இந்தியா தன் இரண்டாம் இடத்தை இழக்கும் அபாயமும் உள்ளது.

இந்திய அணியின் பலம்
மேலும், இந்திய அணி எத்தனை வலுவாக இருக்கிறது என்பதை உள்ளது உள்ளபடி காட்டப்போகும் தொடராக நியூசிலாந்து தொடர் இருக்கும். ஆஸ்திரேலியா போன்ற பலம் குறைந்த அணியை வீழ்த்தியதை வைத்து இந்திய அணியின் பலத்தை எடை போட முடியாது.

முழு பலத்துடன் இறங்குமா இந்தியா?
இந்தியா, நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் சமாளிக்க வலுவான அணியை களமிறக்க வேண்டும். அப்போது தான் உலகக்கோப்பைக்கு முன் வெற்றிநடை போட்டு தெம்புடன் இருக்க முடியும். பும்ரா அணியில் இல்லாத நிலையில், இந்தியா தன் முழு பலத்துடன் இறங்கவில்லை. இது பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
