
தோனிக்கு ஏற்பட்ட காயம்
தோனி ஆஸ்திரேலிய தொடரை தொடர்ந்து, நியூசிலாந்து தொடரின் இரண்டாவது போட்டியில் சிறப்பாக ஆடினார். அண்ட் போட்டியில் தோனி 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். எனினும், அந்த போட்டியில் அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக்
தோனியின் காயத்தால் அடுதாஹ் இரண்டு போட்டிகளில் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றார். மூன்றாம் போட்டியில் ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்த தினேஷ் கார்த்திக், அடுத்த போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து விமர்சனத்தை சந்தித்தார்.

நான்காவது போட்டி சொதப்பல்
நான்காவது போட்டியில் தினேஷ் கார்த்திக் மட்டுமல்லாமல் எந்த பேட்ஸ்மேனும் சரியாக ஆடவில்லை. சாஹல் 18 ரன்கள் அடித்ததே இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. எனினும், ரசிகர்கள், விமர்சகர்கள் மிடில் ஆர்டரின் வீழ்ச்சி தான் இந்த மோசமான சொதப்பலுக்கு காரணம் என கூறி வருகின்றனர்.

அம்பதி ராயுடு அல்லது தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஐந்தாவது போட்டியில் தோனி களம் இறங்க தயாராக இருந்தால் அவரை ஆட வைத்து தினேஷ் கார்த்திக்கை நீக்க வேண்டும் என கருத்து கூறியுள்ளார். ஐந்தாவது போட்டியில் தோனி ஆடினால், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவர் வாய்ப்பை இழப்பது உறுதி.

ஷுப்மன் கில் வாய்ப்பு
கோலி கடைசி இரு போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட நிலையில், கடந்த போட்டியில் அவரது இடத்தில் ஆடிய இளம் வீரர் ஷுப்மன் கில் ஐந்தாவது போட்டியில் மீண்டும் ஒரு வாய்ப்பு பெறுவார் என கூறப்படுகிறது. ரோஹித் தான் தற்போதைய கேப்டன் என்பதால் அவர் தினேஷ் கார்த்திக், ராயுடு, கில் மூவரில் யாரை நீக்குவார் என்பது தெரியவில்லை.

ஐந்தாவது போட்டியில் வெற்றி கிட்டுமா?
ஐந்து போட்டிகள் கொண்ட நியூசிலாந்து தொடரில் இந்தியா 3-1 என்ற நிலையில் இருக்கிறது. தொடரை கைப்பற்றி இருந்தாலும், கடைசி இரு போட்டிகளில் தொடர் தோல்வி ஏற்பட்டால் அது வீரர்களை மனதளவில் பாதிக்கும் என்பது உறுதி. இதை தவிர்க்க இந்தியா ஐந்தாவது போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications