தரம்சாலா : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டி நடைபெற்ற மைதானத்தில் சேஸிங் செய்ய சாதகமான சூழல் இருந்தது. இரண்டாவது பந்துவீசும் அணிக்கு பனிப்பொழிவு காரணமாக பந்தை வீசுவதில் சிக்கல் இருக்கும் என்ற நிலையில், டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் கான்வே ஒன்பது பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து மற்றொரு துவக்க வீரர் வில் யங் 27 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து முகமது ஷமி இந்தப் போட்டியில் வீசிய முதல் பந்தில் பவுல்டு அவுட் ஆகி ஆட்டமிழந்தார். அதன் பின் ரச்சின் ரவீந்திரா - டேரில் மிட்செல் இணைந்து கூட்டணி அமைத்து 159 ரன்கள் குவித்தனர்.
ரச்சின் ரவீந்திரா நிலையான ஆட்டம் ஆடி 87 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஷமி பந்துவீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். அவர் ஆட்டமிழந்த பின் நியூசிலாந்து வீரர்கள் வரிசையாக விக்கெட்டை இழந்தனர். ஆனால், டேரில் மிட்செல் நின்று ஆடி அதிரடியாக ரன் குவித்தார். அவர் 127 பந்துகளில் 130 ரன்கள் குவித்தார். 49.5 ஓவரில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

டாம் லாதம் 5, பிலிப்ஸ் 23, சாப்மன் 6, மிட்செல் சான்ட்னர் 1, ஹென்றி 0, பெர்குசன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.
முகமது ஷமி சிறப்பாக செயல்பட்டு 54 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார். பும்ரா, சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 73 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தாலும் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். பும்ரா, ஜடேஜா, சிராஜ் ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாக கொடுத்து இருந்தனர்.
அடுத்து இந்தியா 274 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடியது. ரோஹித் சர்மா வழக்கம் போல அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தார். 40 பந்துகளில் 4 சிக்ஸ், 4 ஃபோர் அடித்த அவர் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், அவரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணிக்கு டார்கெட் ரன் ரேட் குறைவாக இருந்தது.
அடுத்து விராட் கோலி நிலையான ஆட்டம் ஆடினார்.ஆனால், மறுபுறம் மற்ற பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடாமல் வெளியேறினர். சுப்மன் கில் 26, ஸ்ரேயாஸ் ஐயர் 33, கே எல் ராகுல் 27 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினர். தன் முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆடிய சூர்யகுமார் யாதவ் 2 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். விராட் கோலி பந்தை பார்த்துக் கொண்டே, சூர்யகுமார் யாதவ் வருவதை பார்க்காமல் போக, அவர் ரன் அவுட் ஆனார்.
அடுத்து ஜடேஜா உடன் கூட்டணி அமைத்து கோலி வெற்றிக்கு அருகே அணியை அழைத்துச் சென்றார். வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில், சிக்ஸ் அடித்து தன் சதத்தை நிறைவு செய்ய நினைத்த கோலி கேட்ச் கொடுத்து 95 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா கடைசி ரன்களை பவுண்டரி மூலம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஜடேஜா 44 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா 48 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இத்துடன் இந்தியா 5 போட்டிகளில் ஆடி ஐந்திலும் வெற்றி பெற்றுள்ளது. 5 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.