Asia Cup: இந்தியாவுக்கு எதிராக 79 வருட சாதனையை முறியடித்த ஓமன் வீரர் ஆமீர் கலீம்.. 43 வயதில் அரைசதம்
அபுதாபி: 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக ஓமன் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆமீர் கலீம் மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இந்த ஒரு போட்டியின் மூலம், 79 ஆண்டுகளாக எந்த வீரராலும் தகர்க்க முடியாத ஒரு மாபெரும் சாதனையை உடைத்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
அபுதாபியில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 189 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஓமன் அணி களமிறங்கியது. ஒருபுறம் அனுபவமிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க, மறுபுறம் 43 வயதைக் கடந்த ஆமீர் கலீம், ஒரு இளம் வீரருக்குரிய துடிப்புடன் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

வெறும் 46 பந்துகளைச் சந்தித்த அவர், ஏழு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 64 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியளித்தார். சக வீரரான ஹம்மத் மிர்சா-வுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு அவர் 93 ரன்கள் சேர்த்தது, இந்திய அணியை ஒரு கணம் நிலைகுலையச் செய்தது.இந்த அற்புதமான அரைசதத்தின் மூலம், ஆமீர் கலீம் பல்வேறு சாதனைகளைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து, இந்தியாவிற்கு எதிராக அரைசதம் அடித்த மிகவும் வயதான வீரர் என்ற 79 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்தார். இதற்கு முன்பு, 1946 ஆம் ஆண்டு, இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் வாலி ஹேமண்ட், தனது 43 வயது 31 நாட்களில் இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 69 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது, 43 வயது 303 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தி, ஆமீர் கலீம் புதிய வரலாறு படைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில், ஒரு முழுநேர உறுப்பு நாட்டிற்கு (Full-Member Nation) எதிராக அரைசதம் அடித்த மிகவும் வயதான வீரர் என்ற கிறிஸ் கெய்ல்-இன் சாதனையைம் ஆமீர் கலீம் தகர்த்தார். மேலும், டெஸ்ட் விளையாடும் ஒரு அணிக்கு எதிராக 42 வயதைக் கடந்தும் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
ஆசிய கோப்பை வரலாற்றில், முந்தைய நாள் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி படைத்த (மிகவும் வயதான வீரர் அரைசதம்) சாதனையையும் அவர் முறியடித்தார். பேட்டிங்கில் மட்டுமல்லாது, பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்ட அவர், 3 ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுக்கொடுத்து, அக்சர் படேல் மற்றும் சிவம் துபே ஆகியோரின் முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தி, தனது ஆல்-ரவுண்டர் திறமையையும் வெளிப்படுத்தினார்.
யார் இந்த ஆமீர் கலீம்?
பாகிஸ்தானில் பிறந்து, கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வலம் வந்த ஆமீர் கலீமுக்கு, அங்கு நிலவிய அரசியல் காரணமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அதன் பிறகு, ஓமன் நாட்டிற்காக விளையாடத் தொடங்கிய அவர், தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். ஓமன் அணி இந்தப் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications