அபுதாபி: 2025 ஆசியக் கோப்பை தொடரில் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று அபுதாபியில் ஓமன் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி முடிவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு முக்கிய தருணமாக அமையப்போகிறது.
ஆம், இந்த போட்டியின் மூலம், சர்வதேச டி20 அரங்கில் 250 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது அணி என்ற மைல்கல் சாதனையை இந்தியா படைக்கவுள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடிய அணிகளின் பட்டியலில், பாகிஸ்தான் 275 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
தற்போது 249 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, ஓமனுக்கு எதிரான போட்டியின் மூலம் 250 சர்வதேச டி20 போட்டிகள் என்ற மைல்கல்லை எட்ட உள்ளது. 2006 ஆம் ஆண்டு வீரேந்திர சேவாக் தலைமையில் தனது முதல் டி20 பயணத்தைத் தொடங்கிய இந்திய அணி, இன்று கிரிக்கெட் உலகின் சக்திவாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள 249 போட்டிகளில் 166 வெற்றிகளுடன், மற்ற பெரிய கிரிக்கெட் நாடுகளை விட அதிக வெற்றி சதவீதத்தை (66% மேல்) இந்தியா கொண்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், இந்திய அணி சில மாற்றங்களுடன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால், முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்து, இதுவரை வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பளிக்க அணி இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, வேகப்பந்து வீச்சின் தூணாக விளங்கும் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஓய்வளிக்கப்படலாம். அவருக்குப் பதிலாக, இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. மேலும், இளம் வீரர் ஹர்ஷித் ராணாவும் அணியில் இடம்பிடிக்கக் காத்திருக்கிறார்.
பேட்டிங்கைப் பொறுத்தவரை, முதல் இரண்டு போட்டிகளிலும் குறைவான இலக்குகளைத் துரத்தியதால், இந்த முறை முதலில் பேட்டிங் செய்து, சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்பாக ஒரு நல்ல ஸ்கோரை எட்ட அணி நிர்வாகம் விரும்பும். தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள்.
அபிஷேக் சர்மா அதிரடியான தொடக்கங்களைக் கொடுத்தாலும், சுப்மன் கில் ஒரு நீண்ட இன்னிங்ஸை விளையாட விரும்புவார். கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானுக்கு எதிராக நல்ல பார்மில் காணப்பட்ட நிலையில், திலக் வர்மா போன்ற இளம் வீரர்களும் களத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
இந்திய அணி 2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அடுத்த ஏழு நாட்களில் நான்கு போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கும் என்பதால், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், சிவம் துபே மற்றும் அக்சர் படேல் ஆகியோரைக் கொண்ட மிடில் ஆர்டர், பேட்டிங் பயிற்சியை மேற்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
மறுபுறம், ஓமன் அணிக்கு இந்தப் போட்டி மிகவும் சவாலானது. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டிகளில் முறையே 67 மற்றும் 130 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணியின் பேட்டிங் வரிசை தடுமாறி வருகிறது. ஹம்மாத் மிர்சா (27) மற்றும் ஆர்யன் பிஷ்ட் (24) ஆகியோரைத் தவிர, வேறு எந்த வீரரும் 30 ரன்களைத் தாண்டவில்லை.
இந்தியாவின் சுழற்பந்து வீச்சையும், வேகப்பந்து வீச்சையும் எதிர்கொள்வது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அபுதாபி மைதானத்தில் ஓமன் அணிக்கு அதிக அனுபவம் இருந்தாலும், இந்திய அணியின் பலம் மற்றும் சமநிலையைத் தாண்டி வெற்றி பெறுவது கடினமான காரியமே.