துபாய்: 2025 ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில், போட்டி முடிந்த பிறகு சமூக வலைதளமான 'X' பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள் தற்போது இந்திய ரசிகர்களிடையே பரவி வருகிறது.
பாகிஸ்தான் வீரர்களின் சீண்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இருவரும் நான்கு வார்த்தைகளில் பதிவிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, "பாகிஸ்தான் வீரர்கள் வாய் சவடால் மட்டுமே விடுவார்கள். நாங்கள் போட்டியை வெல்வோம்" என்ற பதிலடியை இருவருமே கொடுத்து இருக்கிறார்கள்.

துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு சுப்மன் கில் - அபிஷேக் ஷர்மா ஜோடி வலுவான அடித்தளம் அமைத்தது. முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவர்களில் 105 ரன்கள் சேர்த்தது. வெறும் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் விளாசிய அபிஷேக் ஷர்மா, ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அவருக்கு துணையாக ஆடிய சுப்மன் கில் 28 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் குவித்தார். போட்டியின்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களான ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் இவர்கள் பேட்டிங் செய்த போது விக்கெட் வீழ்த்த முடியாத விரக்தியில் அவர்களுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
போட்டி முடிந்ததும் சுப்மன் கில் - அபிஷேக் ஆகிய இருவரும் இந்த மோதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்களது 'X' பக்கத்தில் பதிவிட்டனர். சுப்மன் கில், "செயல் பேசும், வார்த்தைகள் அல்ல" (Game speaks, not words.) என்று பதிவிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் ஷர்மா, போட்டியின் படங்களை பகிர்ந்து, "நீங்கள் பேசுங்கள், நாங்கள் ஜெயிக்கிறோம்" (You talk, we win.) என்று பதிவிட்டார். இது பாகிஸ்தான் அணிக்குத் தக்க பதிலடியாக அமைந்தது. இந்த இரண்டு பதிவுகளும் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவி, ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் அபிஷேக் ஷர்மா பல சாதனைகளையும் படைத்தார். போட்டியின் முதல் பந்திலேயே ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் சிக்ஸர் விளாசியதன் மூலம், டி20 போட்டியில் இந்திய இன்னிங்ஸின் முதல் பந்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
போட்டியின் இரண்டாவது சிக்ஸர் மூலம், சர்வதேச டி20 அரங்கில் தனது 50-வது சிக்ஸரை பதிவு செய்தார். இதன் மூலம், முழுநேர உறுப்பு நாடுகளில் இருந்து அதிவேகமாக (குறைந்த பந்துகளின் அடிப்படையில்) 50 சிக்ஸர்களை எட்டிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவர் தனது 331-வது பந்தில் இந்த மைல்கல்லை எட்டினார்.
வெறும் 24 பந்துகளில் அரைசதம் கடந்ததன் மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்-இன் (29 பந்துகள்) சாதனையை முறியடித்தார். தற்போது சர்வதேச டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அபிஷேக் ஷர்மா, அடுத்து வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளார்.