இஸ்லாமாபாத்: "நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன், ஆசிய கோப்பையில் இந்தியா எங்களுடன் விளையாட மறுத்துவிட வேண்டும். ஏனென்றால், அவர்கள் எங்களை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மோசமாக அடிப்பார்கள்," - இது வேறு யாரோ சொன்னதல்ல. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி, தனது சொந்த அணியை நினைத்து, விரக்தியின் உச்சத்தில் பேசிய வார்த்தைகள்தான் இவை.
சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி வாங்கிய மரண அடி, அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் புயலைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் அணியால் கத்துக்குட்டி அணிகளை தாண்டி யாருடனும் வெற்றி பெறவே முடியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் சொதப்பியது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில், பாகிஸ்தான் அணி ஒரு கிரிக்கெட் அணியா அல்லது பள்ளி மாணவர் அணியா என்று சந்தேகப்படும் அளவிற்கு மிக மோசமாக ஆடியது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 294 ரன்கள் குவித்தது. 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வெறும் 92 ரன்களுக்கு சுருண்டு, 202 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. கேப்டன் முகமது ரிஸ்வான், சயிம் அயூப், அப்துல்லா ஷபீக் ஆகியோர் டக் அவுட் ஆக, பாபர் ஆசம் 9 ரன்களில் வெளியேறினார். மொத்த அணியும் வெறும் 29.2 ஓவர்களில் கூடாரம் திரும்பியது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்தார்.
இந்த படுதோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கொந்தளித்து வருகின்றனர். சோயப் அக்தர், "ராவல்பிண்டி பிட்சை எல்லா இடத்திற்கும் தூக்கிக்கொண்டு போக முடியாது" என்று கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால், பாசித் அலியோ ஒரு படி மேலே சென்று, இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடவே கூடாது என்று கெஞ்சியுள்ளார்.
'தி கேம் பிளான்' என்ற யூடியூப் சேனலில் பேசிய பாசித் அலி, "உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் தொடரில் இந்தியா விளையாட மறுத்தது போல, ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தானுடன் விளையாட மறுத்துவிட வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால், அவர்கள் எங்களை மிக மிக மோசமாக, உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு அடிப்பார்கள்," என்று கதறியுள்ளார்.
இதைக் கேட்டு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சிரித்தபடியே, "இந்த ஆட்டத்தை வைத்துப் பார்த்தால், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானிடம் கூட ஜெயிக்காதே" என்று கூற, அதற்கு பாசித் அலி, "நாங்கள் ஆப்கானிஸ்தானிடம் தோற்றால் கூட இந்த நாட்டில் யாரும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், இந்தியாவிடம் தோற்றால் மட்டும் எல்லோருக்கும் பைத்தியம் பிடித்துவிடுகிறது," என்று பதிலளித்தார்.
பாகிஸ்தானின் ஒருநாள் போட்டி ஆட்டம் மிக மோசமாக இருந்தாலும், ஆசிய கோப்பை டி20 ஃபார்மட்டில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது. அந்தத் தொடரில் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் போன்ற முக்கிய வீரர்கள் ஆடவில்லை. எனவே, டி20 ஃபார்மட்டில் பாகிஸ்தான் அணி வலுவாகவே கருதப்படுகிறது.
எது எப்படியோ, இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தப் போட்டிக்கு முன்பாகவே, பாகிஸ்தான் முன்னாள் வீரர் இப்படி பேசியிருப்பது, அந்த அணியின் மனநிலையை அப்பட்டமாகக் காட்டுகிறது. இந்த விமர்சனங்கள் பாகிஸ்தான் அணிக்கு அழுத்தத்தைக் கொடுக்குமா அல்லது அவர்களை வீறுகொண்டு எழச் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.