Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக்.கை அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

மொஹாலி: மொஹாலியில் நடந்த 2வது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.

Dhoni

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் இந்தியா பேட் செய்தது.

பட்டாசாக பொறிந்த ஷேவாக்

தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் விஸ்வரூபம் எடுத்து அடித்து நொறுக்கி பாகிஸ்தான் பந்து வீச்சை பதம் பார்த்தார். அவரது பேட்டில் சிக்கிய பந்துகளெல்லாம் பவுண்டரிக்குப் பறக்க மொஹாலியே குதூகலித்தது.

உமர் குல்லின் பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். பட்டாசாக பொறிந்த ஷேவாக் 25 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 38 ரன்களைக் குவித்திருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனார்.

நிதானமாக ரன் குவித்த சச்சின்

அதன் பின்னர் ரன் குவிப்பு சச்சின் வசம் வந்தது. அவரும் நிதானமாக ரன் சேர்க்க ஆரம்பித்தார். இடையில் 6 முறை அவர் அவுட் ஆகப் பார்த்து தப்பித்தார்.

ஒவ்வொரு முறையும் சச்சின் அதிர்ஷ்டவசமாக தப்பியபோது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போனார்கள்.

நிதானமாகவும் அதே சமயம் சீராகவும் விளையாடிய சச்சின் செஞ்சுரியை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்த நிலையில், 85 ரன்கள் சேர்த்திருந்த போது, சயீத் அஜ்மலின் பந்தில், ஷாஹித் அப்ரிதியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

115 பந்துகளைச் சந்தித்த சச்சின் 85 ரன்களை எடுத்தார். இதில் 11 பவுண்டரிகள் அடக்கம். இது அவருக்கு 95வது அரை சதமாகும்.

சச்சினை 100வது சதத்தை எடுக்க விடாமல் தடுப்போம் என்று முன்பு கூறியிருந்தார் அப்ரிதி. அதே போல செய்து விட்டது பாகிஸ்தான். சச்சின் ஆட்டமிழப்பால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஷாக் கொடுத்த யுவராஜ் சிங்

போட்டித் தொடர் முழுவதுமே ஆல் ரவுண்ட் பெர்மான்ஸைக் காட்டி கலக்கி வந்த மண்ணின் மைந்தரான யுவராஜ் சிங் இன்றைய போட்டியிலும் பட்டையைக் கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அவரும் சந்தித்த முதல் பாலை அடித்து விளாசப் பார்த்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் போல்ட் ஆகி விட்டார் யுவராஜ்.

போராடிய ரெய்னா

அதன் பின்னர் டோணியும், சுரேஷ் ரெய்னாவும் சேர்ந்து சரிவைத் தடுத்து ரன் சேர்க்க முயற்சித்தனர். இதில் டோணி 25 ரன்கள் எடுத்த நிலையில் வஹாப் ரியாஸ் பந்தில் வீழ்ந்தார்.

மறு முனையில் சுரேஷ் ரெய்னா கடுமையாக போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு உற்ற துணையாக பெரிய அளவில் யாரும் நிற்கவில்லை. இதனால் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினார் ரெய்னா.

ஹர்பஜன் சிங் சற்று ஒத்துழைப்புக் கொடுத்து ஆடினார். அவர் 15 பந்துகளில் 12 ரன்களைச் சேர்த்தார். பின்னர் வந்தவர்கள் படபடவென்று சரியவே,
இந்த நிலையில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 260 ரன்களுடன் நின்று விட்டது.

பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை வஹாப் ரியாஸ் மட்டுமே இந்தியாவுக்குப் பெரும் மிரட்டலாக அமைந்தார். சிறப்பாக பந்து வீசிய அவர் 5 விக்கெட்களைச் சாய்த்தார்.

ஆரம்பத்தில் அதிரடி-அப்புறம் சொதப்பல்

இதையடுத்து பாகிஸ்தான் ஆட வந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கம்ரன் அக்மலும், முகம்மது ஹபீஸும் இணைந்து சிறப்பாக ஆரம்பித்தனர். இதனால் இந்திய ரசிகர்கள் சற்றே டென்ஷனானார்கள்.

19 ரன்கள் எடுத்திருந்தபோது ஜாகிர்கான் வீசிய பந்தை அடித்தார் கம்ரன். அதை அழகாக கேட்ச் செய்து கம்ரனை பெவிலியனுக்கு அனுப்பி முதல் சரிவுக்கு வித்திட்டார் யுவராஜ் சிங்.

அசத்திய அசத்

அதன் பின்னர் இளம் வீரர் அசத் சபீக்குடன் இணைந்து சரிவைத் தடுக்க முயன்றார் ஹபீஸ். இதற்கு பலனும் இருந்தது. இருவரும் இணைந்து ரன்களைக் குவிக்க ஆரம்பித்தனர். இவர்களைப் பிரிக்க இந்தியா கடுமையாக போராடியது.

கடைசியில், யுவராஜ் சிங் பந்தில் அசத் 30 ரன்கள் எடுத்து கிளீன்போல்ட் ஆகி திரும்பினார். பின்னர் ஹபீஸை முனாப் படேல் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். ஹபீஸ் எடுத்த ரன்கள் 43.

திணறி வெளியேறிய யூனிஸ்கான்

அனுபவம் வாய்ந்த வீரரான யூனிஸ்கான் இன்றைய போட்டியில் கடுமையாக திணறினார். 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரை யுவராஜ் சிங் அனுப்பி வைத்தார்.

மிஸ்பாவின் தனிப் பெரும் போராட்டம்

தோல்வியின் வாசலில் பாகிஸ்தான் நின்றிருந்த போதிலும் மிஸ்பா உல் ஹக் தனி நபராக கடுமையாக போராடி ரன்களைச் சேர்த்தது அனைவரையும் கவர்ந்தது.கடைசி வரை அவர் தனது போராட்டத்தைக் கைவிடவில்லை.நம்பிக்கையுடன் அவர் ஆடிய விதம் பாகிஸ்தானியர்களுக்கு நிச்சயம் ஆறுதலைக் கொடுத்திருக்கும்.

கடுமையாக போராடிய மிஸ்பாவின் போராட்டம் கடைசியில் வீணாகிப் போனது. 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த பாகிஸ்தான் 231 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

தேங்க்ஸ் சச்சின்!

இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கியக் காரணகர்த்தாக்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். அவர் மட்டும் இன்று சிறப்பாக விளையாடியிராவிட்டால் இந்திய குறைந்த ஸ்கோரையே எட்டியிருக்கும். ஆனால் அவர் பொறுமையாகவும், சிறப்பாகவும் ஆடி 85 ரன்களைக் குவித்ததால் இந்தியா வலிமையான நிலையை எட்ட முடிந்தது.

அதேபோல பேட்டிங்கில் ஜொலிக்காவிட்டாலும் பந்து வீச்சில் பிரமாதப்படுத்தி விட்டார் யுவராஜ் சிங். அவரைப் போலவே ஆசிஷ் நெஹ்ராவும் சிறப்பாக பந்து வீசினார். முனாப் படேலும், ஜாகிர்கானும் தத்தம் பங்குக்கு முக்கிய விக்கெட்களை வீழ்த்தினர். ஹர்பஜனும் சிறப்பான பந்து வீச்சை வெளிக்காட்டினர். மொத்தத்தி்ல இந்தியப் பந்து வீச்சு இன்று சிறப்பானதாகவே இருந்ததால் வெற்றி எளிதில் வசமானது.

3வது முறையாக இறுதிப் போட்டியில் இந்தியா

உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவது இது 3வது முறையாகும். 1983ம் ஆண்டு முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. அப்போட்டியில் அப்போது ஜாம்பவானான மேற்கு இந்தியத் தீவுகள் அணியை அபாரமாக வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.

அதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவில் 2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்இறுதி ஆட்டத்திற்கு இந்தியா முன்னேறியது. அப்போட்டியில் சரியாக விளையாடாமல் சொதப்பியதால் ஆஸ்திரேலியாவிடம் படு தோல்வியைச் சந்தித்தது.

இந்த நிலையில் தற்போது 3வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது இந்தியா. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக இதைக் கொண்டாடி வருகிறார்கள்.

போட்டியைப் பார்த்த மன்மோகன், கிலானி

முன்னதாக இன்றைய போட்டியை தொடக்கத்தில் சிறிது நேரம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் பார்த்து ரசித்தனர். பின்னர் போட்டியின் கடைசிக் கட்டத்தில் இரு பிரதமர்களும் நேரில் கண்டு ரசித்தனர்.அதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்டோரும் போட்டியைக் கண்டு களித்தனர்.

முதலில் பாகிஸ்தான் வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் கிலானியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கை குலுக்கினர். பின்னர் இந்திய வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 2ல் இலங்கையுடன் இறுதி மோதல்

ஏப்ரல் 2ம் தேதி மும்பை வாங்கடே மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில், இலங்கை அணியை எதிர்கொள்கிறது இந்தியா. கடந்த உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய அணி இலங்கை. தற்போது 2வது முறையாக தொடர்ந்து அது இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.

இரு அணிகளுமே முன்னாள் சாம்பியன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளில் யார் வென்றாலும் அது அவர்களுக்கு 2வது சாம்பியன் பட்டமாக அமையும்.

சச்சின் மேன் ஆப் தி மேட்ச்

ஆட்ட நாயகன் விருது 85 ரன்களை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்த சச்சின் டெண்டுல்கருக்குக் கிடைத்தது.

Story first published: Thursday, June 7, 2012, 12:26 [IST]
Other articles published on Jun 7, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+