அகமதாபாத் : பாகிஸ்தான் வீரர்கள் தன் ஓவரில் பவுண்டரி அடித்துக் கொண்டே இருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா பந்திடம் ஏதோ பேசிவிட்டு பவுலிங் போட்டார்.
அந்த பந்திலேயே அவர் விக்கெட் வீழ்த்தி அதிர வைத்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

சிலர் இந்த சம்பவத்தை, பாகிஸ்தான் வீரர் ஆமிர் சொஹைல் விக்கெட்டை, வெங்கடேஷ் பிரசாத் வீழ்த்தியதுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆன 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பும்ரா - சிராஜ் முதல் 8 ஓவர்களை வீசினர். சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார்.
அடுத்து ஹர்திக் பாண்டியாவிடம் 9வது ஓவரை அளித்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அந்த ஓவரில் ஏழு ரன் விட்டுக் கொடுத்தார் பாண்டியா, அடுத்து வீசிய 11வது ஓவரில் 2 ஃபோர் உட்பட 11 ரன்களை விட்டுக் கொடுத்தார். அடுத்து 13வது ஓவரை வீச வந்தார்.
அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் ஃபோர் அடித்தார். தொடர்ந்து ரன்களை வாரிக் கொடுத்ததால் பதற்றமானார் பாண்டியா. பின் ரோஹித் சர்மா சில ஆலோசனைகள் கூறினார். அதன் பின் பாண்டியா பந்தை எடுத்து கைகளில் வைத்து குனிந்து ஏதோ மேஜிக் செய்வது போல பந்திடம் ஏதோ பேசினார் அல்லது வாயை அருகே கொண்டு சென்றார்.

அந்த பந்தை பாண்டியா வீச, இமாம் உல் ஹக் பந்தை அடிக்க ஆசைப்பட்டு எட்ஜ் செய்தார். விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் பந்தை கேட்ச் பிடித்தார். ஹர்திக் பாண்டியா விக்கெட் எடுத்து ரன்களை விட்டுக் கொடுத்த அழுத்தத்தில் இருந்து விடுதலை அடைந்தார்.
பாண்டியா பந்திடம் என்ன சொன்னார்.. என்ன மந்திரம் போட்டார்.. என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர். 1996 உலகக்கோப்பை தொடரில் இதே போலவே ஆமிர் சொஹைல் வெங்கடேஷ் பிரசாத் பந்தை ஃபோர் அடித்து அவரை வெறுப்பேற்றி இருப்பார். அடுத்த பந்தில் வெங்கடேஷ் பிரசாத் அவரை பவுல்டு அவுட் செய்வார். அதை போலவே இந்த சம்பவமும் நடந்துள்ளது.