துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 41 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன. இதுவரரை நடந்த 16 ஆசிய கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியதே இல்லை என்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மொத்தமாக இதுவரை எத்தனை முறை ஒரு தொடரின் இறுதிப் போட்டியில் மோதி உள்ளன? என்று பார்க்கலாம்.
சர்வதேச கிரிக்கெட்டில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 12 முறை இறுதிப் போட்டிகளில் (ஒருநாள் மற்றும் டி20) மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் 8 முறையும், இந்தியா 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இறுதிப் போட்டிகளைப் பொறுத்தவரை பாகிஸ்தானின் கையே ஓங்கியுள்ளது. கடைசியாக 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா கடைசியாகப் பாகிஸ்தானை வீழ்த்தியது, 2007 டி20 உலகக் கோப்பையில்தான். அதாவது பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 18 ஆண்டுகள் ஆகிறது.

இந்த வரலாற்றுப் பின்னணியில், கடந்த காலங்களில் இரு அணிகளும் மோதிய மறக்க முடியாத இறுதிப் போட்டிகளை ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்.
இரு அணிகளும் மோதிய முதல் இறுதிப் போட்டி இது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
ஷார்ஜாவில் நடந்த இந்தப் போட்டியில், கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சேத்தன் ஷர்மா வீசிய பந்தை ஜாவித் மியாண்டட் சிக்ஸருக்குப் பறக்கவிட்டு பாகிஸ்தானுக்கு திரில் வெற்றி தேடித் தந்தார். அவரது 116 ரன்கள் ஆட்டம், இன்றும் பேசப்படும் ஒரு வரலாற்று இன்னிங்ஸ் ஆகும்.
இந்தப் போட்டியில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆக்கிப் ஜாவேத், வெறும் 37 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பேட்டிங் வரிசையைச் சரித்தார். இதனால் பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெற்றது.
ஆமிர் சோஹைலின் ஆல்-ரவுண்ட் ஆட்டத்தால் (அரைசதம் மற்றும் 2 விக்கெட்டுகள்), பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை இந்தியாவை வீழ்த்தி ஷார்ஜாவில் கோப்பையை வென்றது.
வங்கதேசத்தில் நடந்த இந்த முத்தரப்பு தொடரில், மூன்று இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் மற்றும் மூன்றாவது இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, கோப்பையை வென்றது. சச்சின் டெண்டுல்கர் தொடர் நாயகனாக ஜொலித்தார். இந்த மூன்று இறுதிப் போட்டிகளையும் சேர்த்து தான் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 12 இறுதிப் போட்டிகளில் மோதி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் நடந்த இந்தப் போட்டியில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அசார் மஹ்மூத் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய அணி 168 ரன்களில் சுருண்டு தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வாசிம் அக்ரமின் (3 விக்கெட்டுகள்) அபாரமான பந்துவீச்சால் 125 ரன்களுக்குச் சுருண்டது. பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெற்றது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், கவுதம் கம்பீரின் 75 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 157 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரின் பரபரப்பில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தோனி தலைமையிலான இளம் படை வரலாறு படைத்தது.
மிர்பூரில் நடந்த இந்தப் போட்டியில், யூனிஸ் கான் எடுத்த 108 ரன்கள் மற்றும் சல்மான் பட் குவித்த 129 ரன்கள் உதவியால் பாகிஸ்தான் 315 ரன்கள் குவித்தது. இந்திய அணி போராடியும், 290 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. தோனி, யுவராஜ் அரைசதம் அடித்தது மட்டுமே இந்தியாவுக்கு ஆறுதலாக அமைந்தது.
லண்டனில் நடந்த இந்தப் போட்டியில், ஃபக்கர் ஜமானின் அபாரமான சதத்தால் பாகிஸ்தான் 338 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணி, 158 ரன்களில் சுருண்டு படுதோல்வியடைந்தது.
இந்த வரலாற்றுப் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருந்தாலும், துபாய் சர்வதேச மைதானத்தில் செப்டம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி, கிரிக்கெட் உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்று என இரண்டு முறையும் பாகிஸ்தானை வீழ்த்தி, தோல்வியைச் சந்திக்காத ஒரே அணியாக இந்தியா கம்பீரமாக இறுதிப் போட்டிக்குள் நுழைகிறது.
இதுவரை 16 முறை நடைபெற்றுள்ள ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டம் வென்று, ஆசியாவின் ராஜாவாகத் திகழ்கிறது. ஆனால், ஒருமுறை கூட பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டியில் மோதியதில்லை. மறுபுறம், பாகிஸ்தான் அணி இரண்டு முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது.
இந்தத் தொடரில் இந்திய அணி காட்டி வரும் ஆதிக்கம் தொடருமா அல்லது இறுதிப் போட்டிகளில் சிறப்பாக ஆடும் தனது வரலாற்றைப் பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை நிரூபிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். துபாயில் அரங்கேறப் போகும் இந்த கிரிக்கெட் யுத்தத்திற்காக, ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கிறது.