For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யுவராஜ் சிங்கிற்கு வந்த சிக்கல்.. IND vs PAK போட்டி ரத்து செய்யப்பட்டது.. WCL உரிமையாளர் விளக்கம்

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் (WCL) தொடரில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதில் இந்தியா சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ் சிங்கை நோக்கி ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளால் தான் தொடர் ரத்து செய்யப்பட்டதாக அந்த தொடரின் உரிமையாளர் கூறி இருக்கிறார்.

ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் போன்ற இந்திய அணியின் முக்கிய வீரர்கள் போட்டியில் இருந்து விலகியதே இதற்குக் காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பெரும் சர்ச்சை குறித்து WCL தொடரின் உரிமையாளர் ஹர்ஷித் தோமர் தற்போது மௌனம் கலைத்து, நடந்தது என்ன என்பது குறித்து முழு விளக்கத்தையும் அளித்துள்ளார்.

India vs Pakistan Match Cancelled WCL Owner Harshit Tomar Admits Our Mistake

நாங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம்

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் எந்த விதமான போட்டியிலும் பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கை வலுப்பெற்றது. சமூக வலைதளங்களில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் சூழலில் போட்டியை நடத்த முயன்றது தவறு என்பதை ஒப்புக்கொண்டுள்ள ஹர்ஷித் தோமர், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசினார்.

அவர் கூறுகையில், "இந்தத் தொடருக்கான திட்டமிடல் 8-10 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. போட்டி அட்டவணை கடந்த டிசம்பரிலேயே வெளியிடப்பட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் (ECB) இரு நாடுகளின் புவிசார் அரசியல் சூழல் குறித்து நீண்ட நேரம் விவாதித்தோம். அதன் பிறகே அவர்கள் போட்டியை நடத்த அனுமதி அளித்தார்கள்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பஹல்காம் சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளித்தது. போட்டி நெருங்க நெருங்க, இந்தியா-பாகிஸ்தான் மோதலின் எதார்த்தத்தை மக்கள் உணரத் தொடங்கினர். சமூக வலைதளங்களில் எங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்திய ரசிகர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் நாங்கள் தவறிவிட்டோம். இந்தச் சூழலில் இந்தப் போட்டியைத் திட்டமிட்டது முதிர்ச்சியற்ற செயல் என்பதை ஒப்புக்கொள்கிறேன்," என்று ஹர்ஷித் தோமர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இந்திய வீரர்கள் அனைவரும் ஒரே குரலில் எதிர்ப்பு

பாகிஸ்தான் உடனான போட்டியைப் புறக்கணிப்பது என்பது சில வீரர்களின் முடிவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அணியின் நிலைப்பாடு என்பதையும் தோமர் உறுதிப்படுத்தினார். "இந்திய அணியில் இருந்த 15 வீரர்களுமே பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டாம் என்ற முடிவில் ஒன்றுபட்டு நின்றார்கள். இது அவர்களின் கூட்டு முடிவு," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், "புற்றுநோயுடன் போராடியபோதும் நாட்டுக்காக உலகக் கோப்பையில் விளையாடிய யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் மீது கேள்விகள் எழுப்பப்பட்டது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. நாங்கள் இந்தியர்கள், நாங்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். எனவே, வீரர்களின் முடிவை மதித்து போட்டியை ரத்து செய்தோம்," என்றார்.

மற்ற போட்டிகள் நடக்கும்போது இது தவறா?

அதே சமயம், தனது தரப்பு நியாயத்தையும் ஹர்ஷித் தோமர் முன்வைத்தார். "விரைவில் மகளிர் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. ஆசியக் கோப்பையிலும் இரு அணிகளும் விளையாட உள்ளன. அப்படி இருக்கும்போது, நாங்கள் மட்டும் இந்த லெஜெண்ட்ஸ் போட்டியை நடத்த விரும்பியதில் என்ன தவறு இருக்கிறது? கடைசி நிமிடத்தில் எதையும் மாற்றுவது இயலாத காரியமாக இருந்தது," என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்திய அரசின் முடிவுக்கு எப்போதும் கட்டுப்படுவேன் என்றும், பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என்று அரசு தெளிவாக உத்தரவிட்டால் அதை முழுமையாகப் பின்பற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்திய வீரர்கள் போட்டியிலிருந்து விலகியதால், பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாட்டுக்காக வீரர்கள் எடுத்த இந்த உறுதியான நிலைப்பாடு பாராட்டுகளைப் பெற்றாலும், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு முக்கியப் போட்டி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது.

Story first published: Monday, August 4, 2025, 12:25 [IST]
Other articles published on Aug 4, 2025
English summary
India vs Pakistan Match Cancelled: WCL Owner Harshit Tomar Admits 'Our Mistake'
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+