அகமதாபாத் : ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் எட்டாவது முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாதித்தது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.
இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மோசமாக ஆடிய பாகிஸ்தான் அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லா விதத்திலும் சொதப்பி தோல்வியை தழுவியது. இந்தியா அந்த மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது.

1992 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் முதல் 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் வரை ஏழு முறை உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி இருக்கின்றன. அதில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தது.
தற்போது எட்டாவது முறையாக நடந்த உலகக்கோப்பை மோதலில் பாகிஸ்தான் அணி தன் மோசமான சாதனையை மாற்றுமா? என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
அதே போல, இந்திய ரசிகர்கள் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் என நம்பினர். அதை செய்து காட்டி இருக்கிறது தற்போதைய இந்திய அணி.
பாகிஸ்தான் பேட்டிங் : இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 3 விக்கெட்கள் மட்டுமே இழந்து இருந்தது. ஆனால், அடுத்த 36 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்களுக்கு சுருண்டது.
பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 50, ரிஸ்வான் 49 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்கள் ஆகும். துவக்க வீரர்கள் இமாம் உல் ஹக் 36, அப்துல்லா ஷபிக் 20 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்களில் 12 ரன்கள் எடுத்த ஹசன் அலி தவிர அனைவரும் ஒற்றை இலக்க ரன்களே எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தியா பவுலிங் : இந்திய பவுலர்கள் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பும்ரா, குல்தீப் யாதவ் மிகவும் குறைவாக ரன் கொடுத்ததும், சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தியதுமே பாகிஸ்தான் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.
பாகிஸ்தான் பவுலிங் :
அதே போல, சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களை கொண்ட அணி என கூறிக் கொள்ளும் பாகிஸ்தான் 30 ஓவர் பந்து வீசி வெறும் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியது. ஷஹீன் ஷா அப்ரிடி 6 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ரோஹித் சர்மா இவரது ஓவரை அதிரடியாக அணுகினார்.
ஹசன் அலியும் இதே போலத் தான் வீசினார். 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் விக்கெட்டே எடுக்கவில்லை. ஷதாப் கான், ஹாரிஸ் ரௌப் ஓவருக்கு 7 ரன்களுக்கும் மேல் வாரிக் கொடுத்தார்கள். இதெல்லாம், வேகப் பந்துவீச்சில் அச்சுறுத்தும் அணிக்கான அடையாளங்கள் இல்லை.
இந்தியா பேட்டிங் : இந்திய அணிக்கு பாகிஸ்தான் 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது. காய்ச்சலில் இருந்து அணிக்கு திரும்பிய சுப்மன் கில் துவக்க வீரராக இறங்கி 4 ஃபோர் அடித்து 16 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி 16 ரன்கள் சேர்த்து அவரும் தவறான ஷாட் ஆடி ஆட்டமிழந்தார்.
ஆனால், ரோஹித் சர்மா அடித்து ஆடி மிரட்டினார். சிக்ஸராக அடித்து தள்ளி அரைசதம் கடந்த அவர் அதன் பின்னும் அதிரடியை தொடர்ந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து ஆடினார். பின் ரோஹித் சர்மா 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிதான ஆட்டம் ஆடி வெற்றியை உறுதி செய்தது. இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் : பாகிஸ்தான் அணி பேட்டிங் பவுலிங் இரண்டிலும் சராசரிக்கும் கீழே தான் செயல்பட்டது. இந்தியா உடனான போட்டி என்ற பயம், அழுத்தம் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், இந்திய அணி எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் பாகிஸ்தான் அணியை எல்லா விதத்திலும் அடித்து வீழ்த்தி இருக்கிறது.