நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள போட்டி நியூயார்க் நகரத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளர் ஒருவரை நீக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் சுழற் பந்துவீச்சாளர்களாக அணியில் இடம் பெற்றனர். அவர்கள் இருவரும் பேட்டிங்கும் செய்யக்கூடியவர்கள் என்பதால் ஆல் ரவுண்டர்கள் என்ற அடிப்படையில் அணியில் இடம் பெற்று இருந்தனர்.

தற்போது நியூயார்க் மைதானத்தில் சுழற் பந்துவீச்சுக்கு பிட்ச் அதிகம் ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் இந்திய அணி நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பயன்படுத்தி இருந்தது. முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா என 4 வேகப் பந்துவீச்சாளர்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டனர்.
மேலும் ஐந்தாவது வேகப் பந்துவீச்சாளராக ஆல்ரவுண்டர் சிவம் துபே அணியில் இடம் பெற்று இருக்கிறார். எனவே, இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் தேவையில்லை. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அக்சர் பட்டேல் மட்டுமே அதிக ஓவர்கள் பந்து வீசியிருந்தார். ரவீந்திர ஜடேஜா ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அக்சர் பட்டேலுக்கு நியூயார்க் மைதானத்தில் விக்கெட் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதே மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி போட்டியிலும், பின்னர் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அக்சர் பட்டேல் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். எனவே, அவரை பிளேயிங் லெவனில் தக்க வைத்துக் கொண்டு ரவீந்திர ஜடேஜாவை நீக்க வாய்ப்பு உள்ளது.
இதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் உள்ளது. நியூயார்க் பிட்ச் பேட்டிங் செய்ய மிக கடினமாக உள்ளது. நேற்று நடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரண்டு அணிகளும் 20 ஓவர்களில் சராசரியாக 100 ரன்கள் மட்டுமே எடுத்தன. தென்னாப்பிரிக்க அணி 104 ரன்கள் என்ற இலக்கை மிகவும் போராடி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தான் வென்றது. அதே பிட்ச்சில்தான் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி பந்து வீச்சை விட பேட்டிங்கை தான் வலுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. எனவே, ரவீந்திர ஜடேஜா மற்றும் அச்சர் பட்டேல் ஆகிய இரண்டு ஆல் ரவுண்டர்களில் ஒருவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை ஆறாவது அல்லது ஏழாவது வரிசையில் பேட்டிங் செய்ய வைக்க வாய்ப்பு உள்ளது. மற்றபடி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வேறு எந்த மாற்றமும் இருக்காது.
இந்தியா அணி பிளேயிங் லெவன் : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா (அல்லது) சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்