மான்செஸ்டர்: என்னா அடி.. என்னா அடி.. இடி முழக்கம் போல 140 ரன்களை விளாசி அவுட்டானார் ரோகித் ஷர்மா. அப்படியும் அவர் திருப்தியடையவில்லை. எதிர்பாராத விதமாக ஒரு கேட்சில் அவர் சிக்கியதுதான், ரோகித்தின் கோபத்திற்கு காரணம்.
மான்செஸ்டரில் இன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், அதிரடி காட்டினார் ரோகித் ஷர்மா. வெறும் 113 பந்துகளில், 140 ரன்களை விளாசி பாகிஸ்தான் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார்.

40 ஓவரை நெருங்கிய போது, ரன் ரேட்டை மேலும் அதிகரிக்கும் ஆவலில் இருந்தார் ரோகித் ஷர்மா. எனவே, வித்தியாசமான ஷாட் அடிக்கலாம் என நினைத்து வேகப்பந்து வீச்சாளர், ஹசன் அலி பந்தை, ஸ்கூப் ஷாட் அடித்தார். பந்தும், சரியாக பேட்டின் நடுவே பட்டது. ஆனால், ஷாட் ஃபைன் லெக்கில், நின்று கொண்டிருந்த வகாப் ரியாசின் கையில் பந்து சென்று விழுந்தது.
இதை, ரோகித் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அங்கே ஃபீல்டர் நின்றதை ரோகித் பார்க்கவே இல்லை. கேட்ச் பிடிக்கப்பட்ட பிறகுதான், தான் ஃபீல்டர் நின்றதை கவனிக்கவில்லையே என்று ரோகித் கடுமையாக அப்செட்டானார். வாயில் எதையோ சொல்லி கத்தியபடி, பேட்டை ஓங்கி காற்றில் அசைத்தார்.
இதைப் பார்த்த, மறுமுனையில் நின்ற கேப்டன் விராட் கோஹ்லி, ரோகித் முதுகை தட்டிக் கொடுத்து, அவரை ஆறுதல்படுத்தி பெவிலியனுக்கு அனுப்பி வைத்ததை பார்க்க முடிந்தது.