ஆஷஸ் தொடரை விட இந்தியா - பாக். டெஸ்ட் தொடர் தான் பெருசு.. இது வேற லெவல்ல இருக்கும்
நியூடெல்லி : பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி, இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர், புகழ்பெற்ற ஆஷஸ் தொடரை விட சிறந்தது என குறிப்பிட்டு உள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நூறாண்டுகளுக்கும் மேல் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் உலகளவில் பெரும் புகழ் பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடர்.
ஆனால், அதை விட இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் தான் சிறந்தது என அப்ரிடி கூறியுள்ளார். அதை மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜாவும் வழிமொழிந்துள்ளார்.

அப்ரிடி பேசியது என்ன?
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அப்ரிடி பேசும் போது, "இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர் கடுமையான மோதல் என கூறப்படுகிறது. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தினால் அதை விட பெரிதாக இருக்கும்" என குறிப்பிட்டார்.

ஆதரவு அளித்த ரமீஸ் ராஜா
இதை ரமீஸ் ராஜாவும் ஆதரித்து கருத்து கூறினார். "முதலில் பாகிஸ்தான், இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் அதிக வியாபாரமாகும்" என கூறினார்.

இது வேற மாதிரி உணர்வு
மேலும், "டெஸ்ட் போட்டிகளை காப்பாற்ற இந்தியாவும், பாகிஸ்தானும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டும். அது வேறு மாதிரியான அதிர்வையும், உணர்வையும் அளிக்கும். வீரர்களும் கடும் அழுத்தத்தில் எப்படி ஆடுவது என்ற கலையை கற்றுக் கொள்வார்கள்." என முடித்தார் ரமீஸ் ராஜா.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் கஷ்டம்
இந்த பாகிஸ்தான் வீரர்கள் இப்படி கூறினாலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறுவது சிரமம் தான். சமீபத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, பிசிசிஐ மீது ஐசிசியில் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கில் பிசிசிஐ-க்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. பிசிசிஐ இந்த பிரச்சனையை இத்தோடு நிறுத்தாமல், அடுத்து வழக்கு நடத்திய செலவை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டிடம் கேட்கப் போவதாக கூறியுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications