துபாய்: 2025 ஆசிய கோப்பையில் நடக்க உள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி நிர்வாகம் எடுத்த ஒரு முடிவு, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற பெரிய போட்டிகளுக்கு முன்பு இந்திய அணியின் கேப்டனோ அல்லது தலைமைப் பயிற்சியாளரோதான் செய்தியாளர்களைச் சந்திப்பார்கள். ஆனால், நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய அணியின் துணைப் பயிற்சியாளரான ரியான் டென் டோஸ்சேட் பங்கேற்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த எதிர்பாராத மாற்றத்திற்குப் பின்னால், இந்திய வீரர்கள் அறையில் நிலவும் அசாதாரண சூழலே காரணம் என்பது தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் இந்திய வீரர்களையும் மனதளவில் பாதித்துள்ளது. இந்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோரை சர்ச்சைக்குரிய கேள்விகளிலிருந்து பாதுகாக்கவே அவர்களை பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அனுப்ப வேண்டாம் என அணி நிர்வாகம் முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரியான் டென் டோஸ்சேட், இந்தியா - பாகிஸ்தான் புறக்கணிப்பு விவாதம் குறித்த தீவிரத்தை பற்றி பேசினார். "இது மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு விஷயம். இந்திய பொதுமக்களின் உணர்வுகளையும், இரங்கலையும் எங்கள் வீரர்களும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்று அவர் கூறினார்.
மேலும் அவர், "ஒரு கட்டத்தில் இந்த ஆசிய கோப்பை நடக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனால், அரசின் நிலைப்பாடு என்னவோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். மக்களின் உணர்வுகள் எங்களுக்குப் புரிகிறது. அதே சமயம், நாங்கள் தொழில்முறை வீரர்கள். நாளை களத்தில் இறங்கும்போது, இந்தச் சூழ்நிலையிலும் எங்களால் முடிந்தவரை தொழில்முறையாகவும், கவனம் சிதறாமலும் விளையாடுவோம்" என்றார்.
கௌதம் கம்பீர் வீரர்களுக்கு என்ன அறிவுரை கூறினார் என்பது பற்றியும் ரியான் குறிப்பிட்டார். "கம்பீரின் செய்தி மிகவும் தெளிவாக இருந்தது. 'நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கிரிக்கெட்டை அணுகும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்' என்று அவர் வீரர்களுக்குக் கூறினார்" என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பது வெறும் கிரிக்கெட் என்பதைத் தாண்டி, இந்தியாவில் பெரும் உணர்ச்சிப் போராட்டமாக மாறியுள்ளது. இந்த நிலையில், துணைப் பயிற்சியாளரை செய்தியாளர் சந்திப்புக்கு அனுப்பிய அணி நிர்வாகத்தின் இந்த முடிவு இந்திய அணியின் முக்கிய வீரர்களையும், தலைமைப் பயிற்சியாளரையும் தேவையற்ற அழுத்தங்களிலிருந்து விடுவித்து, அவர்களை ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.