இந்தியா - பாகிஸ்தான் மகளிர் உலகக்கோப்பை போட்டி எப்போது? ஸ்ட்ரீமிங் செய்து பார்ப்பது எப்படி?
பிர்மிங்ஹாம்: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி ஜூன் 14 அன்று பிர்மிங்ஹாமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, இந்த டி20 உலகக் கோப்பை தொடரையும் வெற்றியோடு தொடங்க தயாராகி வருகிறது. இரு அணிகள் மோதி உள்ள போட்டிகள், பலம் என்ன? எந்த சேனல், ஸ்ட்ரீமிங் தளத்தில் நேரலையில் எப்படி பார்ப்பது? உள்ளிட்ட தகவல்களை காணலாம்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் மகளிர் அணிகள் இதுவரை மோதியுள்ள கணக்குகளைப் பார்க்கும்போது இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கிறது. இதுவரை இரு அணிகளும் மோதியுள்ள போட்டிகளில் இந்தியா 13 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பையில் துபாயில் நடந்த மோதலில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முக்கிய வீராங்கனைகள்
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கி அதிரடி காட்டக் காத்திருக்கின்றனர். இந்திய அணியில் காயம் காரணமாக அமன்ஜோத் கவுர் மற்றும் காஷ்வி கவுதம் ஆகியோர் விளையாடாதது சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மறுபுறம், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த ஒரு ஆண்டில் பேட்டிங்கில் 50-க்கும் மேல் சராசரியும், பந்துவீச்சில் 25-க்கும் கீழ் சராசரியும் கொண்டு ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். இவர் கராச்சியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெறும் 15 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாத்திமா சனாவை வீழ்த்த இந்திய அணி சிறப்பான உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும்.
போட்டி எப்போது? எங்கு பார்ப்பது?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 உலகக்கோப்பை போட்டி ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. டாஸ் போடும் நிகழ்வு மாலை 6:30 மணிக்கு நடைபெறும்.
இப்போட்டியை தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம். மொபைல் மற்றும் இணையதளத்தில் நேரலையாகப் பார்க்க விரும்புபவர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications
