Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK போட்டிக்கு முன் புகுந்த “கரந்தியா”.. மகளிர் உலகக்கோப்பை பயிற்சியில் நடந்த சம்பவம்

கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மைதானத்திற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் நேற்று மாலை இந்திய வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மைதானத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை அனைவரும் கண்டனர்.

மைதானத்திற்குள் புகுந்த பாம்பு, சிங்களத்தில் 'கரந்தியா' என்று அழைக்கப்படும் ஒரு சாதாரண சாரைப் பாம்பு ஆகும். இந்த வகை பாம்புகள் இந்த மைதானத்தில் தோன்றுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பாக லங்கா பிரீமியர் லீக் போட்டிகளின் போதும், இந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதிய ஒருநாள் போட்டியின் போதும் இந்த பாம்பு மைதானத்திற்குள் வந்துள்ளது.

India vs Pakistan Women s World Cup Clash Snake Enters Indian Team Practice What Happened

இது குறித்து மைதான அதிகாரி ஒருவர் கூறும்போது, "இது விஷமற்ற பாம்பு. யாரையும் கடிக்காது. இது ஒரு கரந்தியா, எலிகளைத் தேடி வந்திருக்கிறது" என்று சாதாரணமாகக் குறிப்பிட்டார். இந்திய வீராங்கனைகள் வலைப்பயிற்சிக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருந்த அந்த பாம்பு, மைதானத்தின் வடிகால் மற்றும் கேலரிகள் வழியாக ஊர்ந்து சென்றது. இதைப் பார்த்த இந்திய வீராங்கனைகள், உதவியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் யாரும் பீதியடையவில்லை என்றாலும் லேசான சலசலப்பு எழுந்தது.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும் உணர்ச்சிகள், உச்சக்கட்ட டி.வி. ரேட்டிங்குகள், வெறித்தனமான ரசிகர்கள் எனப் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால், மகளிர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, களத்தில் இந்த நாடகங்களுக்கு பெரிதாக இடமில்லை. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்பது கிட்டத்தட்ட இந்திய அணி பக்கமே இருந்து வருகிறது. இந்தியாவிடம் பாகிஸ்தான் மகளிர் அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது.

இதுவரை பாகிஸ்தான் மகளிர் அணி, 16 டி20 போட்டிகளில் வெறும் மூன்றில் மட்டுமே இந்தியாவை வென்றுள்ளது. ஆனால், 11 ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை கூட இந்தியாவை வென்றதில்லை. இது குறித்து இந்திய மகளிர் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் ஹேமலதா கலா கூறும்போது, "இது கிரிக்கெட் ஆட்டம். ஞாயிற்றுக்கிழமை எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை. உண்மையில் இரு அணிகளுக்கும் இடையே போட்டியே இல்லை" என்று கூறினார்.

ஆசிய கோப்பை சர்ச்சை பாதிக்குமா?

இந்தியாவின் ஆதிக்கம் முழுமையாக இருப்பதால், வெற்றி என்பது ஒரு சாதாரண மைல்கல்லாகவே இருந்து வருகிறது. இந்தச் சூழலில், சமீபத்தில் நடந்து முடிந்த ஆடவர் ஆசிய கோப்பையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியின் கைகளால் கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்ததும், பதிலுக்கு நக்வி கோப்பையுடன் மைதானத்தை விட்டு வெளியேறியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சைகளின் தாக்கம் இந்த மகளிர் உலகக்கோப்பையிலும் எதிரொலிக்கும் என தெரிகிறது.

இந்திய ஆடவர் அணி ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்ததை போலவே, இந்திய மகளிர் அணியினரும் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் போட்டிக்குப் பின் கைகுலுக்குவதைத் தவிர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த மகளிர் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்தது. மறுபுறம் இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையை அபாரமாக வென்றது. இதை வைத்தே ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் முடிவு கணிக்கக்கூடியதாக உள்ளது.

Story first published: Saturday, October 4, 2025, 9:43 [IST]
Other articles published on Oct 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+