டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள முதல் டி20 போட்டியில் மழை பெய்ய உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்து இருப்பதால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படக் கூடும்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த மைதானத்தின் பிட்ச் அதிக பவுன்ஸ் கொண்டு இருக்கும். அதனால், பேட்ஸ்மேன்களுக்கு வேகப் பந்துவீச்சை சமாளித்து ஆடும் திறன் இருக்க வேண்டும். இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் பவுன்ஸ்க்கு மற்றும் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். ஆனால், அதைத் தாண்டி மழையும் போட்டியில் பெரிய பங்கு வகிக்க உள்ளது.

அங்கே தென்னாப்பிரிக்க நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி துவங்க உள்ளது. அதற்கு முன்பும், போட்டி நேரத்திலும் லேசான மழை இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், போட்டி நடக்கும் நேரத்தில் வானம் 100 சதவீதம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனவும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும், மழை காரணமாக போட்டி சில ஓவர்கள் குறித்தும் நடத்தப்படலாம்.
மழை மற்றும் மேக மூட்டம் இரண்டுமே வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் விஷயம் ஆகும். குறிப்பாக பந்து நன்றாக ஸ்விங் ஆகும். முதல் சில ஓவர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலானதாக இருக்கும். அதே போல இரண்டாம் இன்னிங்க்ஸிலும் முதல் சில ஓவர்கள் அதிக ஸ்விங் இருக்கும். இரண்டு அணிகளுமே தங்கள் வேகப் பந்துவீச்சாளர்களை நம்பியே களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், முகமது சிராஜ் மற்றும் தீபக் சாஹர் உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் மூன்று அல்லது நான்கு வீரர்களுமே கூட போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் சொதப்பினால் மேட்ச் கையை விட்டு போய்விடும்.
பேட்டிங்கில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் துவக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் இருவரும் விக்கெட்டை இழக்காமல் பவர்பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களை கடந்து விட்டால் இந்தியாவுக்கு சாதகமாக போட்டி அமையக் கூடும்.