செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் அணியில் இருந்தும் அவருக்கு அதிக ஓவர்கள் கொடுக்காமல் ஓரங்கட்டி வைத்திருந்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் ரோஹித் சர்மாவின் இந்த முடிவை விமர்சனம் செய்ததை அடுத்து மூன்றாவது நாள் அஸ்வினுக்கு துவக்கத்திலேயே ஓவர் கொடுத்தார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாகவே இந்திய அணி நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன், ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளர் போதும் என்ற முடிவில் அஸ்வினை மட்டும் அணியில் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்த போது தென்னாப்பிரிக்கா வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி இந்திய அணியை 245 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆக்கியது. அதே திட்டத்தை கேப்டன் ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்த போதும் செயல்படுத்தினார்.
இந்திய அணியில் இடம் பெற்ற பும்ரா, சிராஜ் சிறப்பாக வீசி 2 விக்கெட் வீழ்த்திய போதும், மற்ற இரு வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குர் அதிக ரன்களை கொடுத்து ஏமாற்றம் அளித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓவர்களை குறைத்து விட்டு அஸ்வினுக்கு ஓவர் அளித்து இருக்கலாம். அஸ்வின் வீசிய 8 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். ஆனால், ரோஹித் தொடர்ந்து வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே ஓவர்கள் கொடுத்தார்.
வேகப் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி எளிதாக இரண்டாம் நாளிலேயே இந்திய அணியின் ஸ்கோரை தாண்டி கூடுதல் ரன்களை எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. இதனால், விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், மூன்றாம் நாள் தொடங்கிய போது முதலில் பும்ரா, சிராஜ் சில ஓவர்கள் வீசிய பின் அஸ்வினுக்கு ஓவர் கொடுத்தார் ரோஹித். இரண்டாம் நாள் செய்த தவறை மூன்றாவது நாள் அவர் திருத்திக் கொண்டதாக தெரிகிறது.