Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: இந்திய அணி தோற்கக் காரணமே இதுதான்.. தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற பின் சூர்யகுமார் பேச்சு

அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பெரும் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியைச் சந்தித்தது. பேட்டிங்கில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் வரிசையாகத் தடுமாறியதே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இந்திய கேப்டன் சூர்யகுமார் பவர்பிளே ஓவர்களில் செய்த சொதப்பலே இந்திய அணிக்கு காரணம் என கூறினார்.

மில்லர் - பிரேவிஸ் அதிரடி

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தொடக்கத்திலேயே நெருக்கடி கொடுத்தனர். குயின்டன் டி காக் (6), எய்டன் மார்க்ரம் (4), ரியான் ரிக்கெல்டன் (7) என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, தென்னாப்பிரிக்கா 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

India vs South Africa 2026 T20 World Cup South Africa Crush India by 76 Runs as Batters Collapse in Ahmedabad

ஆனால், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸ் மற்றும் அனுபவ வீரர் டேவிட் மில்லர் ஆகியோர் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களைக் குறி வைத்துத் தாக்கிய இந்த ஜோடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. பிரேவிஸ் 29 பந்துகளில் 45 ரன்களும், டேவிட் மில்லர் 35 பந்துகளில் 63 ரன்களும் குவித்தனர். இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில் 44 ரன்கள் விளாச, தென்னாப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

இந்தியத் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர்.

சீட்டுக்கட்டு போலச் சரிந்த இந்தியா

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் இஷான் கிஷன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து திலக் வர்மா (1), அபிஷேக் சர்மா (15) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் (18), ஹர்திக் பாண்டியா (18) என யாரும் நிலைத்து நிற்கவில்லை.

சிவம் துபே மட்டும் தனி ஆளாகப் போராடி 37 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். ரிங்கு சிங் டக் அவுட் ஆனார். தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர் மார்கோ யான்சன் 4 விக்கெட்டுகளையும், கேஷவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியைச் நிலைகுலையச் செய்தனர். இறுதியில் இந்திய அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களுக்குச் சுருண்டது.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் வேதனை

தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "நாங்கள் பந்துவீச்சில் மிகச் சிறப்பாகவே தொடங்கினோம். ஆனால் 7 முதல் 15 ஓவர்கள் வரை தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். பவர் பிளே ஓவர்களில் போட்டியை வெல்ல முடியாது, ஆனால், அப்போதே போட்டியைத் தோற்றுவிட முடியும் என்பதை நாங்கள் உணர வேண்டும்.

எங்களுக்குத் தேவையான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. இது விளையாட்டின் ஒரு பகுதிதான். இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டு வருவோம். பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் கூட்டணி மிகவும் ஆபத்தானது. அவர்கள் இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். அடுத்த போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. அங்கு பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்றிலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிப் பாதைக்குத் திரும்புவோம்" என்று தெரிவித்தார் சூர்யகுமார் யாதவ்.

Story first published: Sunday, February 22, 2026, 23:08 [IST]
Other articles published on Feb 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+