IND vs SA : ரிங்கு சிங் முதல் டி20 சாதனை.. பவர்பிளேவில் இறங்கி இந்திய அணியை காப்பாற்றிய அதிரடி மன்னன்
கேபெர்ஹா : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரிங்கு சிங் அபார ஆட்டம் ஆடி முதல் சர்வதேச அரைசதம் அடித்தார். அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 159 ஆக இருந்தது.
இந்திய அணி பவர்பிளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது களமிறங்கிய ரிங்கு சிங், தன் பொறுப்பான ஆட்டத்தால், கேப்டன் சூர்யகுமாருடன் கூட்டணி அமைத்து இந்திய அணி 180 ரன்களை கடக்க முக்கிய காரணமாக இருந்தார்.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

அடுத்து மூன்றாம் வரிசையில் இறங்கிய திலக் வர்மா 20 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். சரியாக பவர்பிளே ஓவர்கள் முடிய ஒரு பந்து இருக்கும் போது இந்தியா 3 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் களத்துக்கு வந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் களத்தில் இருந்தார்.
இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க அணியை திணற வைத்தனர். விக்கெட்கள் வீழ்ந்தாலும் இருவரும் பந்துவீச்சாளர்களை குறி வைத்து ரன் குவித்தனர். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 1 ரன், ஜடேஜா 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் ஜடேஜா ஆட்டமிழந்த அடுத்த பந்தில் அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழந்தார். 19.3 ஓவரில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் மழை வந்ததால் போட்டி தடைபட்டது.
ரிங்கு சிங் அப்போது 39 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இதுவே அவரது முதல் சர்வதேச டி20 அரைசதம் ஆகும். பின்னர் மழை நின்ற போது கால தாமதம் ஆனதால் 19.3 ஓவரில் இந்தியா 180 ரன்கள் எடுத்ததோடு முதல் இன்னிங்க்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டது. தென்னாப்பிரிக்கா அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications