கேப் டவுன் : இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்த நிலையில், அது குறித்து அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் பேசி இருக்கிறார்.
இந்தப் போட்டி நடைபெற்ற கேப் டவுன் மைதானத்தின் பிட்ச் முதலில் வெறும் கண்ணால் பார்த்த போது நன்றாக இருந்ததாகவும், ஆனால் அது மோசமான பிட்ச்சாக இருந்ததாகவும் கூறினார்.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், பெரிய அளவில் ரன் குவிக்கலாம் என கருதி பேட்டிங் தேர்வு செய்த நிலையில் வெறும் 55 ரன்களுக்கு அந்த அணி ஆல் - அவுட் ஆனது. அதனால், கேப்டன் டீன் எல்கர் எடுத்த டாஸ் முடிவு தவறு என பலரும் கூறினர்.
மேலும், இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் 23 விக்கெட்களும், இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாதி நாளில் 10 விக்கெட்களும் வீழ்ந்தன. இந்த அளவுக்கு விக்கெட் வீழ்ச்சி இருக்கக் காரணம் போட்டி நடந்த பிட்ச் மோசமாக இருந்தது தான். வேகப் பந்துவீச்சுக்கு கூடுதலாக ஒத்துழைக்கும் வகையில் பிட்ச்சை தயார் செய்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில் தன் டாஸ் முடிவு, பிட்ச்சில் தான் எதிர்பார்த்தது என்ன என்பது குறித்து போட்டி முடிந்த உடன் பேசினார் டீன் எல்கர். "இந்தப் போட்டி கடினமான ஒன்றாக இருந்தது. போட்டிக்கு வரும் முன் நேர்மறையாக வந்தோம். ஆனால், முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் எங்களை முடித்து விட்டது. இந்தியா சிறப்பாக பந்து வீசியது. சூழ்நிலைகளை வெகுவாக பயன்படுத்திக் கொண்டது." என்றார் டீன் எல்கர்.
மேலும், "ஆனாலும், டெஸ்ட் தொடர் 1 - 1 என டிரா ஆகி இருக்கிறது. 2 - 0 என தொடர் முடிந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும் 1 - 1 என தொடரை முடித்துள்ளோம். எங்கள் வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன். எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்து வீசிய விதம் மற்றும் ஐடன் மார்கிரம் (சதம் அடித்து இருந்தார்) பேட்டிங் செய்த விதம் உலகத்திலேயே இல்லாததை போன்று இருந்தது." என்றார் எல்கர்.
கடைசியாக பிட்ச் குறித்து பேசும் போது, "இது கொஞ்சம் விரிசலான பிட்ச். வெறும் கண்ணால் பார்க்கும் போது நன்றாக இருந்தது. ஆனால், நங்கள் எதிர்பார்த்தற்கு மாறாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அதனால் பாதிக்கப்படும் இடத்தில் நாங்கள் இருந்து விட்டோம். எதிர்காலத்திற்கு இது நல்ல படிப்பினை. நீங்கள் ரோஹித்திடம் கேட்டால் கூட அவர் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்து இருப்போம் என்றுதான் கூறி இருப்பார். அவர்கள் போட்டியின் முதல் செஷனில் எங்களை விட திறமையாக செயல்பட்டார்கள்" என 55 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை ஆல் - அவுட் செய்ததை குறிப்பிட்டார் டீன் எல்கர்.