மும்பை : ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஆறு மாதங்கள் தான் எஞ்சி இருக்கிறது. அதற்குள் இந்தப் போட்டியை சேர்த்தால் இந்தியா வெறும் 4 சர்வதேச டி20 போட்டிகளில் தான் விளையாடுகிறது.
இதனால் யாரை அணியில் சேர்க்க வேண்டும்? எந்த வீரர் எந்த இடத்திற்கு சரி வருவார் என்பது குறித்து இந்திய அணி திட்டத்தை தீட்ட வேண்டும். ஏற்கனவே விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் இந்திய வீரர்கள் அடுத்த கட்ட வீரர்கள் வைத்து தான் அணியை தயாரிக்க வேண்டும்.

இந்த வகையில் ஸ்டார் வீரராக அறியப்படுபவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அணியில் தேர்வு செய்யப்பட்டு இடம்பெறவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி இரண்டு போட்டிக்கு துணை கேப்டன் ஆக இருந்தார்.
மேலும் பெங்களூரில் நடைபெற்ற கடைசி போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார். மேலும் உலக கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி 500 ரன்கள் அடித்தார். இப்படி பல சாதனைகளை படைத்திருக்கும் ஸ்ரேயாஸ், ஏன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியில் இந்தியா சேர்க்கவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள திலக் வர்மா படுமோசமாக விளையாடி வருகிறார். திறமை வாய்ந்த வீரராக திலக் வருமா அறியப்பட்டாலும் அவர் கடந்த சில டி20 போட்டிகளாக பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. புயல் போல் டி20 கிரிக்கெட்டில் அடி எடுத்து வைத்த திலக் வருமா தற்போது புஸ்வானமாக மாறிவிட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய டி20 ஆட்டத்தில் கூட திலக் வர்மா முதல் பந்திலே கோல்டன் டக் ஆகி வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறார். இதனால் திலக் வர்மாவுக்கு வழங்கிய வாய்ப்பை நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்காவது வழங்கி இந்திய அணி தங்களுடைய பிளேயிங் லெவனை கட்டமைத்து இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஸ்ரேயாஸ் ஏன் நீக்கப்பட்டார் என்று இதுவரை இந்திய அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.